தேர்தல் அறிக்கைகள்…ஆறுதல் அறிக்கைகள்?

எதுவொன்றையும் செய்யப்போவதாகச் சொல்லிக்கொண்டிருப்பது மிகவும் எளிது. சொன்னதைச் சொன்னபடி செய்து முடிப்பதுதான் மிக மிகக் கடினம். சொல்லுகிற எல்லோருக்குமே செயல் வல்லமை இருந்துவிடுவதில்லை. செயல் வல்லமை மிக்கவர்கள் பெரும்பாலும் எதையும் சொல்லிக் கொண்டிருப்பதில்லை. சொல் – செயல் ஆகிய இரண்டு கூறுகளை வைத்தே மனிதர்களும், மனிதர்களின் பல்வேறு வகையான பேராளர்களும் மதிப்பிடப்படுகிறார்கள். தங்களுக்கும் தங்களது குடும்பத்தின் வளர்ச்சிக்கும் மிகக் கடுமையாக உழைத்து எதை வேண்டுமானாலும் செய்துகொள்பவர்கள், சமூகத்தின் வளர்ச்சிக்கென்று எதையும் எப்போதும் செய்யாதவர்கள், தங்களையும் தங்களது குடும்பத்தையும் மறந்து சமூக வளர்ச்சிக்காகவே எப்போதும் செயல்பட்டுக் கொண்டிருப்பவர்கள், எந்த வகையிலும் யாருக்கும் எப்போதும் பயன்படாமல் வெற்றுச் சொற்களைப் பேசியே வாழ்ந்து மடிகிறவர்கள், சமூகத்திற்காகச் செய்யப்போவதாக எப்போதும் எதையாவது சொல்லிக் கொண்டு மட்டுமே இருப்பவர்கள் என்று மனிதர்களில் பல வகையினர் உண்டு. நமது நாட்டின் பெரும்பாலான மக்கள் பேராளர்களும், மக்களை மேலாண்மை செய்யும் நிர்வாகத் தரப்பினரும் கடைசி வகையினராகவே இருக்கின்றனர் என்பதே கடந்த அறுபத்தேழு ஆண்டுக் காலத்து அனுபவ உண்மையாக இருக்கிறது.
நமது நாட்டின் வளர்ச்சியாக நம்முன் வரிசைப்படுத்தப் பட்டிருக்கின்ற அனைத்தும் மக்களின் வளர்ச்சியாகவோ, மக்களுக்கான தேவைகளை நிறைவு செய்பவைகளாகவோ, மக்களுக்கான நிம்மதி மற்றும் நிறைவு உணர்வுகளாகவோ மாறவில்லை. நமது நாட்டின் விடுதலைக்குப் பிறகு நடந்த அத்தனைத் தேர்தல்களும் மக்களின் பிரச்சனைகளையே பேசின. மக்களின் பிரச்சனைகளையே அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது தேர்தல் அறிக்கைகளாக முன்வைத்தன. தேர்தல்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த கட்சிகள் அனைத்தும் மக்கள் நலத் திட்டங்களையே தீட்டித் தீர்த்தன. அத்தகையத் திட்டங்களின் அடிப்படையில் பல்வேறு வகையான மக்கள் நலத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. ஆனால் இன்னமும்கூட கழிப்பறை, அடிப்படைக் கல்வி, சுகாதாரம், மருத்துவம், வறுமை ஒழிப்பு போன்ற கடைநிலை அடிப்படைத் தேவைகளைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருக்க வேண்டியிருக்கிறது. மக்களுக்குச் செய்தாக வேண்டிய அடிப்படை நன்மைகள் குறித்த ஆட்சியாளர்களின் குரல்களும், எதிர்க்கட்சியினரின் குரல்களும், தேர்தல் அறிக்கைகளின் குரல்களும் நமது ஜனநாயகத்தின் சடங்குத் தொடர்ச்சியாக நெடுங்காலமாக ஒலித்துக் கொண்டிருக்கின்றன. நமது அத்தனை ஆட்சியாளர்களும், நிர்வாகத் தரப்பினரும் தங்களது மக்கள் நலச் சாதனைகளை இடைவிடாமல் சொல்லிக் கொண்டிருப்பதுண்டு. ஆனால் மக்கள் என்றைக்கும் அவற்றை மனநிறைவோடு ஆமோதித்து, அங்கீகரித்து வரவேற்றதில்லை. ஏனெனில் ஆட்சியாளர்களின் சாதனைகளும் மக்களின் தேவைகளும் வேறு வேறானவைகளாக இருக்கின்றன. வெறும் கண்துடைப்புத் திட்டங்களும், வெற்று விளம்பர முழக்கங்களும், அவசியமற்ற அறிவிப்புகளும் மக்களுக்குத் தேவைப்படவில்லை. இன்றளவும் நமது நாட்டின் மிகப் பெரும்பான்மை மக்கள் தங்களுக்குக் கிடைத்தவைகளைக் கொண்டு ஏதோ பிழைத்துக் கொண்டிருக்கிறார்களே தவிர, பெறவேண்டிய தேவைகளைப் பெற்று வாழவில்லை. வாழ்வதும் பிழைப்பதும் வேறு வேறானவைகளாகும். அடிப்படைத் தேவையான கல்வி, வேலை வாய்ப்புகளுக்கும் பொருள் உற்பத்திகளுக்குமான பல்வேறு தொழிற்சாலைகள், வேளாண்மைத் தொழில் வளர்ச்சிக்கான அணைகள், பல்வேறு பெரு நிறுவனங்கள், தொழிற்பேட்டைகள் போன்றவை மிகப் பெருந்திட்டங்களாகத் தொடங்கப்பட்டு அவையனைத்தும் நெடுவடிவமெடுத்து செயல்பட்டது பெருந்தலைவர் காமராசர் காலத்தில்தான். காரியங்களில் கவனமாக இருந்து அவற்றை நிறைவேற்றியதாலேயே காமராசர் “கர்மவீரர்” என்று அழைக்கப்பட்டார். அவரது செயல்களின் வீரியமே இன்றளவும் தமிழ்நாட்டை நிமிர்ந்து நிற்ffக வைத்திருக்கிறது. அவருக்குப் பிறகு தமிழகத்தின் வளர்ச்சி என்பது இலவசங்கள், திரைப்படத்துறை, மதுவணிகப் பெருக்கம், வெற்று முழக்கம் என்று நீள்கிறது.
நமது நாட்டுக்கும் வளர்ந்த நாடுகளுக்கும் உள்ள மிகப்பெரிய வேறுபாடு என்னவென்றால், அத்தகைய நாடுகளில் மக்கள் சொல்வதையெல்லாம் இங்கே நமது மத்திய மாநில அரசுகள் சொல்லிக்கொண்டிருக்கும் என்பதுதான். சான்றாக, “விபத்து நடந்த மூன்றாம் நிமிடத்திலேயே மீட்பு வாகனம் வந்துவிடும், அழைத்த ஐந்து நிமிடங்களுக்குள் காவல்துறையினர் வந்துவிடுவார்கள், கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்புகள், வேலை வாய்ப்பு நிவாரணங்கள், போக்குவரத்து வசதிகள், இருப்பிட வசதி உள்ளிட்ட அனைத்துத் தேவைகளையும் அரசாங்கம் எங்களுக்கு மிகச் சரியாகவும் முறையாகவும் செய்துவிடும், எங்களது எத்தகைய புகார்களின் மீதும் அரசு அதிகாரிகள் உடனடியாக உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுவிடுவார்கள்” என்றெல்லாம் வளர்ந்த நாடுகளின் அனைத்து மக்களும் ஒருமித்த குரலில் மிகவும் இயல்பாகச் சொல்வார்கள். இங்கே நமது நாட்டில் இவை அனைத்தையும் நமது அரசுகளே நெடுங்காலமாகச் சொல்லிக் கொண்டிருக்கின்றன. மக்கள் வாயைமூடிக்கொண்டு சிரித்துக் கொண்டிருப்பார்கள். காவல்துறையின் உயர் அதிகாரி ஒருவர் பொதுமக்களின் அனைத்துவகைப் பாதுகாப்பிற்கும் உறுதியளிப்பதாக ஊடகங்களில் தெரிவிக்கிறார் என்றால், அதற்கு முற்றிலும் நேர்மாறான எதிர்கருத்தை மக்கள் ஆங்காங்கே தங்களுக்குள் தெரிவித்துக் கொண்டிருப்பார்கள். அரசியல் தலைவர்கள், ஆட்சித் துறைகளின் நிர்வாகிகள் போன்றவர்கள் தெரிவிக்கின்ற மக்கள் நலக் கருத்துகளுக்கும் இதே நிலைதான். நமது மக்கள் தங்களை ஆள்வோரைக் காட்டிலும் தங்களது கடவுள்களையே அதிகம் நம்புகின்றனர். இதற்கும் காரணம் அரசுகள் மக்களுக்குச் செய்தாக வேண்டிய எதையும் நெடுங்காலமாகச் செய்யவில்லை என்பதுதான். கடவுள் புண்ணியத்தில் வேலை கிடைத்தால், கடவுள் புண்ணியத்தில் ரயில் பயணச் சீட்டு கிடைத்தால், கடவுள் புண்ணியத்தில் நியாயவிலைக் கடையில் பருப்பு கிடைத்தால், கடவுள் புண்ணியத்தில் நோய் குணமானால் என்கிற கோணத்தில்தான் நமது மக்களின் அனைத்து எதிர்பார்ப்புகளும் நீள்கின்றன. ஓர் அரசு, அந்த அரசின் கடமைகள், அந்த அரசில் மக்களுக்கான உரிமைகள் ஆகியவை குறித்த சரியான புரிதல்கள் மக்களுக்கு மட்டுமல்ல அரசுத் தரப்பு நிர்வாகங்களுக்கும் போதுமான அளவுக்கு இல்லை என்பதே நமது ஜனநாயகத்தின் உண்மை.
நாட்டு மக்களின் வரிப்பணத்தில் நமது அரசுகள் மக்களுக்குச் செய்கின்ற, செய்தாக வேண்டிய “கடமைகள்” கூட இங்கே “சாதனை”களாகப் படம்பிடித்துக் காட்டப்படுகின்றன. அத்தகைய கடமைகள், சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்களாகவும் மாறுகின்றன. நம்மிடையே சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படுகின்ற அளவுக்கு சாதனைகள் நடத்தப்படவில்லை. இதுவும் நமது ஜனநாயக உண்மைதான்.
கடந்த அறுபது ஆண்டுகளுக்கும் மேலாகத் தேர்தல் தோறும் நமது அரசியல் கட்சிகளால் வெளியிடப்பட்டு வருகின்ற தேர்தல் அறிக்கைகளை ஒட்டுமொத்தமாகத் தொகுத்துப் படித்தால் எந்த அளவுக்கு அவை சம்பிரதாயமானவை, பொருள்படுத்தப் படாதவை, மறு ஆய்வுகளுக்கு உட்படுத்தப்படாதவை என்பதெல்லாம் தெளிவாக விளங்கும். தேர்தலில் போட்டியிட்டு ஆட்சியைப் பிடிப்பதற்காக அரசியல் கட்சிகள் மேற்கொள்கின்ற பல்வகைச் சடங்குகளில் தேர்தல் அறிக்கையும் ஒன்று என்பதைத் தாண்டி அவற்றின் பயன்கள் என்று பெரிதாக எதுவும் நீள்வதில்லை. நமது அரசியல் கட்சிகளால் இதுவரை வெளியிடப்பட்டிருக்கின்ற ஒட்டுமொத்த தேர்தல் அறிக்கைகளில் வெறும் 15% நிறைவேற்றப் பட்டிருந்தால் கூட நமது நாடு முழுமையான வளர்ச்சியினை அடைந்திருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை. நமது நாட்டில் அரசியல் கட்சிகள் பெருகிக் கொண்டிருக்கின்றன. பொருதளாதார அளவில் சொத்து, வாகனங்கள் என்று அவை நன்றாக வளர்ந்துகொண்டும் இருக்கின்றன. கட்சிகளின் நிர்வாகிகள் பெருகிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பொருளாதார அளவில் வளர்ந்துகொண்டும் இருக்கிறார்கள். நமது நாடும் வளர்ந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் நாட்டின் பெரும்பான்மை மக்கள்தான் தங்களுக்கான அடிப்படைத் தேவைகளில் கூட இன்றளவும் நிறைவு பெற்றவர்களாக இருக்கிறார்கள். நமது அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் அனைத்திலும் கழிப்பறை, குடிநீர், மருத்துவம், கல்வி, வேலைவாய்ப்புகள், நுகர்பொருள் விநியோகம் தொழிலாளர் நலன்கள் ஆகியவற்றை தங்களது ஆட்சியில் மிகச் சிறப்பாக வழங்க இருப்பதைப் பற்றிய வாக்குறுதிகளே மிகவும் முதன்மையானதாக இடம்பெறுகின்றன. இதில் வேதனையும் வேடிக்கையும் என்னவென்றால், கடந்த அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக இத்தகைய அடிப்படையான தேவைகள் குறித்த வாக்குறுதிகளே தவறாமல் தொடர்ந்து தேர்தல் அறிக்கைகளில் இடம் பெற்று வருகின்றன என்பதுதான். எத்தனை ஆண்டுகளை நாம் தேர்தல்களால் கடந்து கொண்டிருந்தாலும் கூட கொஞ்சமும் கூச்சப்படாமல் கழிப்பறை, கல்வி, மருத்துவம், குடிநீர் போன்ற அடிப்படைத் தேவைகளைப் பற்றியே மீண்டும் மீண்டும் பேசிக்கொண்டிருக்கலாம் என்கிற நிலை, ஏமாறுவோரும் ஏமாற்றுவோரும் தங்களது நிலைப்பாடுகளில் மிகவும் உறுதியாக இருப்பதையே எடுத்துக் காட்டுகிறது.
இன்றைய நமது அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் அவற்றை நம்புகின்ற மக்களுக்கு மாய நம்பிக்கைகளை அளிக்கின்றன, தேர்தல் முறையின் ஒரு சடங்கினை நிறைவு செய்கின்றன, அந்தந்த கட்சிகளின் பேச்சாளர்களுக்கு நீட்டி முழக்கிப் பேசுவதற்கு உரிய காகிதக் கருப்பொருள்களாகின்றன என்பனவற்றைத் தாண்டி சமூகத்திற்கு ஆக்கப்பூர்வமான வினைகள் எதையும் புரிவதில்லை. 75% இந்திய மக்கள் குடிநீருக்கும், வேலைவாய்ப்புகளுக்கும், உணவுக்கும், மருத்துவத்துக்கும், கல்விக்கும் கையேந்திக் கொண்டு அலைகிறவர்களாக இன்னமும் இருக்கின்றனர். அல்லது அவர்கள் அவ்வாறே இருக்குமாறு பார்த்துக்கொள்ளப்படுகின்றனர். மக்களின் இத்தகைய தேவைகளே தேர்தல் தோறும் அனைத்துத் தேர்தல் கட்சிகளுக்குமான அறிக்கைகளாக மாறுகின்றன, மேடைகளில் முழக்கங்களாக மாறுகின்றன. எந்த ஒரு கட்சியும் தனது கடந்த காலங்களில் வெளியிட்ட தேர்தல் அறிக்கைகளைக் குறித்து வாய்திறப்பதே இல்லை. மக்களும் அதையெல்லாம் நினைவில் வைத்திருப்பதில்லை. அதே போல எதையெதையோ பேசி மக்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வருகிற ஒரு கட்சி, எதிர்கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் இடம் பெற்றிருக்கின்ற சில ஆக்கப்பூர்வமான அம்சங்களை மக்களின் நலன்கருதி நடைமுறைப்படுத்தலாம் தான். ஆனால் அப்படியெல்லாம் எத்தகைய அதிசயமும் நமது சுதந்திர இந்தியாவில் இதுவரை நடந்ததில்லை. இன்னும் சொல்லப்போனால் தேர்தல் அறிக்கையில் jhதாங்கள் சொன்னவற்றையே 90% அளவுக்குப் புறந்தள்ளிவிட்டு அதில் சொல்லாதவற்றையே ஆளுங்கட்சிகள் அரங்கேற்றுகின்றன. இங்கே ஆளுங்கட்சிகளால் மக்கள் நலச் சாதனைகளாக முன்வைக்கப்படுகின்றவைகளில் மிகப் பெரும்பாலானவை சமூக நோக்கிலும், தொலைநோக்கிலும் மிக மிகத் தற்காலிகமானவைகளாகவும், யாரோ சிலருக்குப் பெரும்பணத்தைக் குவிப்பதாகவும், அரசுக்கும் அதன் நிதி நிலைக்கும் பெரும் இழப்பை ஏற்படுத்துவனவாகவுமே இருக்கின்றன. சான்றாக, மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் பெரும்பயன்களை நல்கியது என்று பரவலாகச் சொல்லப்படுவதுண்டு. ஆனால் அதன் பொருட்டு தனியார்களிடம் அரசு இழந்திருக்கும் பல்லாயிரக்கணக்கான கோடிகளில் எத்தனையோ மருத்துவமனைகளை அரசாங்கமே நவீனமாகக் கட்டமைத்திருக்க முடியும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். மக்களுக்கான முழுமையான மருத்துவம் என்பது அரசின் நேரடிக் கடமை. ஆனால் அரசோ தன் மக்களைத் தனியார் மருத்துவ மனைகளுக்குத் திருப்பி விட்டுக்கொண்டிருக்கிறது. இது ஒரு சிறு சான்றுதான். இதைப்போல இன்னும் எவ்வளவோ பட்டியலிட முடியும். மக்களுக்குத் தேவையானவை என்பதைக் காட்டிலும் எளிதில் தர இயன்றவை, சொல்லிக்காட்டி வாக்குகளைக் கேட்டு வாங்க வசதியானவை எவையெவையோ அவையே அரசின் திட்டங்களாக மாறுகின்றன.
ஒருபக்கம் இன்றைய நமது தமிழ்நாட்டின் பல்லாயிரக்கணக்கான அரசுப் பள்ளிக்கூடங்களில் கரும்பலகை, கட்டட வசதிகள், கழிப்பறை வசதிகள், நூலகங்கள் போன்றவை முறையானதாக இல்லை. இன்னொரு பக்கம் நமது மாநகரங்களின் பேருந்து நிறுத்தங்கள், நடைபாதை தடுப்புக் கம்பிகள் போன்றவையெல்லாம் பளபளக்கும் இரும்புப் பொருள்கள் மற்றும் வண்ணமயமான நெகிழிக் கண்ணாடிகளால் கட்டமைக்கப்பட்டிருப்பதோடு பேருந்து நிறுத்தங்களுக்கு மின் இணைப்புகளும் கொடுக்கப்பட்டுள்ளன. அப்படியான பேருந்து நிறுத்தங்கள் அரசின் சாதனை விளம்பரக் கூடாரங்களாகவும் மாறி பேரழகாக மின்னுகின்றன. இத்தகைய அலங்காரங்கள் எவ்வளவுக் காலத்திற்குத் தன் அழகைத் தக்கவைத்துக்கொண்டு மின்னும் என்பது எல்லோருக்குமே தெரியும் என்றாலும் கூட வேண்டியதை விட்டுவிட்டு வேண்டாதவற்றை வழங்குகின்ற கலாசாரம் அண்ணாவுக்குப் பிறகான ஆட்சியாளர்களிடமிருந்து தொடங்கியது.
விளம்பரப்படுத்திக்கொள்ள ஏதுவான திட்டங்கள், தங்களது முகத்தையும் பெயரையும் ஒட்டிவைப்பதற்கு ஏதுவான இலவசத் பொருள்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் ஆகியவையே இன்று வாக்குகளுக்கான வழிகளாக மாற்றப்பட்டுவிட்டன. எனவேதான் சில அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் இலவசங்கள் பற்றிய அறிவிப்புகள் பெருமளவில் தொடர்ந்து இடம்பெறுகின்றன. வாழ்வாதாரமாகவும் அடிப்படைத் தேவையாகவும் இருக்கின்ற கல்வியையும், உயிர்வாழ்வதற்கான அடிப்படையாக இருக்கின்ற மருத்துவத்தையும் பெறுவதன்பொருட்டு ஏழை எளிய மக்களை லட்சக்கணக்கில் கடன்பட்டுச் செலவழிக்கவைத்துவிட்டு அவர்களுக்கான சிறு சிறு பயன்பாட்டுப் பொருள்களை மட்டும் இலவசமாக வழங்குவது என்பது மிகப்பெரிய அளவிலான ஆட்சி நிர்வாகத் தோல்வியே என்பது அனைவருக்கும் ஒப்புக் கொண்டாக வேண்டிய பேருண்மை.
சுதந்திர இந்தியாவில் அல்லது நமது தமிழ்நாட்டில் தேர்தல் அரசியல் கட்சிகளால் இதுவரை வெளியிடப்பட்ட நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல் அறிக்கைகளை அரசியல் ஆய்வாளர்களும், ஆய்வு அமைப்புகளும் தேடியலைந்து சேகரித்துப் படித்துப் பார்த்தால் எவ்வளவுதூரம் அவை நமது அரசியல் கட்சிகளின் வெற்றுச்சடங்குகளாக இருந்துவருகின்றன என்பது தெளிவாகத் தெரியவரும். ஏன் இத்தனை ஆண்டுகளாக இந்த அறிக்கைகளின் இருபது விழுக்காடு கூட நிறைவேற்றப்படவில்லை, இதைக்குறித்த கேள்விகளை எழுப்ப அமைப்புகள் ஏதுமில்லையா? ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை அட்டையைக் கிழித்துவிட்டு புதிய அட்டைக்கு மாற்றிக்கொள்வதுதான் தேர்தல் அறிக்கையின் தகுதியா, அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள்மீது மத்திய, மாநிலத் தேர்தல் ஆணையங்கள் எத்தகைய எதிர்வினைகளைப் புரிகின்றன என்பனபோன்ற கேள்விகள் எழும். அதேபோல ‘பொலிட்டிக்கல் சயின்ஸ்’ என்று அறியப்பட்டிருக்கின்ற அரசியல் கல்வியில் தேர்தல் அறிக்கைகள் ஆய்வுகளுக்கும், கற்பதற்குமான சான்றுகளாகவோ பாடங்களாகவோ இருக்கின்றனவா, அதேபோல பல்லாயிரக்கணக்கில் மேற்கொள்ளப்படுகின்ற ‘முனைவர்’ பட்ட ஆய்வுகளில் ஒரு பத்துப் பதினைந்து பேர்களாவது தேர்தல் அறிக்கைகளை ஆய்வுசெய்து அவற்றின் இயலாமைகளையும், அவற்றால் இயன்றவைகளையும் அறிவுலகிற்கு அளித்திருக்கிறார்களா? முனைவர் பட்ட ஆய்வுக்கல்வி என்பது அரசியல் அறிக்கைகளைத் தொடக்கூடாத ஓர் உன்னதக்கல்வியா, யாராவது அப்படி ஆய்வு செய்திருப்பார்கள் எனில் அவை எங்கே எந்தப் பரணில் இருக்கிறது, என்பதும் தெளிவுபடுத்தப்படவேண்டும்.
ஆக, தேர்தல் அறிக்கைகள் எனப்பட்டவற்றை எழுதித் தயாரித்தவர்களே மீண்டும் திரும்பிப் பார்ப்பதில்லை. ஒரு கட்சியின் தேர்தல் அறிக்கையினை ஆளும் கட்சியோ அல்லது அடுத்தக்கட்சிகளோ எவ்வகையிலும் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. அவை யாவும் காலந்தவறாமல் சேகரிக்கப்பட்டு எத்தகைய அமைப்புகளாலும் பாதுகாக்கப்படுவதில்லை. ஊடகங்களால் வல்லுனர்களைக் கொண்டு விவாதிக்கப்படுவதில்லை. அவற்றைக் கையில் வைத்துக்கொண்டு அடுத்த தேர்தலுக்கு வாக்கு கேட்டு வந்து நிற்கும் அரசியல்வாதிகளிடம் மக்கள் கேள்வி கேட்பதில்லை. ஆகமொத்தம் எந்தவொரு தரப்புக்கும் அவை பொருட்டே அல்ல என்பதே உண்மையாக இருக்கிறது.
தேர்தல் காலங்களில் அதாவது குறைந்தது ஒரு மாத காலத்தில், ஒரு வேட்பாளர் தன் தொகுதியில் வாக்கு கேட்டு எத்தனை கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து படாத பாடுபட்டு அலைகிறார்? அவர் வெற்றிபெற்று சட்டமன்ற அல்லது நாடாளுமன்ற உறுப்பினரானவுடன் அவரது பதவிக்காலமான ஐந்தாண்டுக் காலத்தில் அதே தொகுதியில் எத்தனைக் கிலோமீட்டர் தூரம் எதன் எதன்பொருட்டு பயணம் செய்கிறார் என்று ஒரு கணக்குப் போட்டுப் பார்த்தாலே அந்த வேட்பாளர்களின் அப்பட்டமான நோக்கம் தெளிவாகத் தெரியவரும். 2016-ஆம் ஆண்டு வரப்போகிற தேர்தலில் எப்படியாவது ஆட்சியைப் பிடித்துவிடவேண்டும் என்கிற தொடர் பேராசையின் விளைவாக இப்போதே சிலர் தமிழகம் முழுவதும் தெருத்தெருவாக அலைந்து நாமக்கல்லில் முட்டைகளிடம் குறைகளைக் கேட்கிறார்கள். காங்கேயத்தில் காளைமாடுகளின் குறைகளைக் கேட்கிறார்கள். தஞ்சாவூரில் நெல்வயல்களிடம் குறைகளைக் கேட்டறிகிறார்கள் அப்படியே அடுத்தடுத்த ஊர்களுக்குப் பயணிக்கிறார்கள். இதில் என்ன வேடிக்கை என்றால் மக்களின் குறைகள் அனைத்தும் பார்க்கும்போதே பட்டவர்த்தனமாகப் பளிச்சென்று தெரிகின்றன. ஆறுகளில் தண்ணீர் இல்லை, கண் எதிரிலேயே ஆறுகளின் மணல் அவ்வளவும் அள்ளிச் செல்லப்படுகின்றன, விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டு தொங்குகிறார்கள், அரசு மருத்துவமனைகள் அனைத்தும் மரண ஓலக் களங்களாகச் காட்சியளிக்கின்றன, பட்டதாரிகள் தங்களது படிப்புக்கான வேலை கிடைக்காமல் லட்சக்கணக்கில் தெருத்தெருவாக அலைந்து கொண்டிருக்கிறார்கள், மின்சாரம் தடைபட்டு ஆங்காங்கே இருண்டுகிடக்கிறது, அரசுப் பேருந்துகள் அனைத்தும் கலகலத்துக் கழன்றபடி ஓடுகிற கொலை வாகனங்களாக மாறியுள்ளன, அனைத்து அரசு அலுவலகங்களிலும் லஞ்சமும் ஊழலும் தலைவிரித்தாடுகின்றன என்றெல்லாம் இன்னும் நீளுகின்ற அவலங்கள் யாவும் கண்களுக்குத் தெளிவாக “தெரிந்து” கொண்டிருக்கும்போது, குறைகளைக் “கேட்டு” அறிவது என்பது கடைந்தெடுத்த கயமைத்தனமல்லவா?
உப்புக்கல்லை வைரமென்று சொன்னால் – நம்பி
ஒப்புக்கொள்ளும் மூடருக்கு முன்னால் – நீ
உளறி என்ன? கதறி என்ன?
ஒன்றுமே நடக்கவில்லை தோழா ரொம்ப நாளா?
என்று பாடினான் மக்கள் கவிஞன் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். நாம் இந்தப் பாடலை இன்னும் எவ்வளவுக் காலத்திற்குப் பாடிக் காட்டிக் கொண்டிருக்க வேண்டுமென்று தெரியவில்லை.

Bookmark the permalink.

One Response to தேர்தல் அறிக்கைகள்…ஆறுதல் அறிக்கைகள்?

  1. karthik says:

    உப்புக்கல்லை வைரமென்று சொன்னால் – நம்பி
    ஒப்புக்கொள்ளும் மூடருக்கு முன்னால் – நீ
    உளறி என்ன? கதறி என்ன?…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *