மலராமல் போன அன்பு – எங்கிருந்து தொடங்குவது – 5

குடும்பம் அன்பினால் கட்டப்படுவது, அன்பை உருவாக்க, வளர்க்க கட்டப்படுவது என்பதே நமது பொதுவான நம்பிக்கையாக இருக்கிறது. ஆனால், ஆழமாக யோசித்தால் குடும்பத்தைப் போல் வன்முறைகள் நிரம்பிய சமூக அமைப்பு வேறொன்றும் இல்லை.
கணவனும் மனைவியுமாக குடும்பத்திற்குள் இணையும் ஆணும் பெண்ணும், ஆண் பெண் எனும் மயக்கம் தெளிந்த பிறகு, குடும்பம் என்ற மாயசக்தியின் வறண்ட கட்டுப்பாடுகளுக்குள் அடைபட்டுவிடுகிறார்கள்.

குடும்பத்தின் வெளிப்படையான நடைமுறைகள் வேறானவை. அந்தரங்கத்தில் செயல்படும் விதிகள் வேறானவை. குடும்பம் ஆணையும் பெண்ணையும் ஒருவருக்கு ஒருவர் எதிரான யுத்தத்தில் நிறுத்துகிறது. இந்த யுத்தத்தின் இலக்கு யுத்தம் புரிதல் மட்டுமே. இங்கு யுத்தம் புரிவதற்கான காரணங்கள் வேண்டியதில்லை. யுத்தத்தில் வெற்றி தோல்விகள் தேவையில்லை. வெல்பவர் யார், வீழ்பவர் யார் என்ற தீர்மானங்கள் இல்லை. ஆனால், யுத்தம் நடைபெற்றுக் கொண்டே இருக்க வேண்டும் என்பதே குடும்பத்தின் அடிப்படை நியதி.
குடும்பம் களத்தில் ஆணையும் பெண்ணையும் இறக்கிவிட்டு அவர்களை பிணைத்திருக்கும் மாயக் கயிறுகளை எல்லா நேரமும் சுழற்றிக் கொண்டே இருக்கிறது. அதற்கு குடும்பத்திற்குத் தேவை சமூகம் உருவாக்கி வைத்திருக்கும் சில நியமங்களும், காலாவதியாகிப் போன கருத்துக்களும் மட்டுமே. உலகமும் வாழ்க்கையும் எவ்வளாவு நவீனமாகிப் போனாலும், கொஞ்சமும் நவீனமாகாமல் புராதன நெடியில் திணறிக் கொண்டிருப்பவை குடும்பங்களே.

குடும்பத்திற்குள் ஏன் சண்டை வருகிறது என்பதே தெரியாது. சண்டை வருவதற்கான காரணங்களும் தேவையில்லை. கணவன் தேநீரை உறிஞ்சிக் குடிப்பதில் இருந்து, மனைவி காய்கறிகாரரிடம் சிரித்து பேரம் பேசி காய்கறி வாங்குவது வரை காரணங்கள் அற்பமானவை. ஆனால், அதில் தொடங்கும் சிடுசிடுப்பு, இருவருக்கும் இடையில் இருக்கும் அன்பை அடியோடு சுரண்டிக் கொண்டே இருக்கும்.
குடும்பத்திற்குள் மிகுந்த அன்னியோன்யமாக இருப்பதாகச் சொல்லும் கணவன் மனைவியின் அன்பை, அன்பென்ற வகைப்பட்டில் சேர்க்க முடியுமா என்பதே சந்தேகம்தான். கணவன் பேசும் உரையாடலை கண்காணித்துக் கொண்டும், அவன் இல்லாத நேரத்தில் அவன் சட்டைப் பையை ஆராய்ந்து கொண்டும், அலுவலகம் முடிந்து வீட்டுக்கு வரும் கணவனை கண்ணாலேயே தீவிர ஸ்கேன் செய்துவிடும் மனைவிகளுக்கும் அது தவறென்றே தெரிவதில்லை. பொண்டாட்டினா சந்தேகப் படாமலா இருப்பாங்க என்று கணவன்களே இதை மகிழ்ச்சியோடு ஆமோதிப்பதும் அன்பின் வழியது உயிர்நிலையா என்று புரியவில்லை.
வெளியில் கணவனும் மனைவியும் சேர்ந்து சந்தோஷமாகக் கிளம்பிப் போவார்கள். தொண்ணூறு சதவீத நேரம், வீட்டுக்கு வரும்போது பிரச்சனைகளோடுதான் திரும்பி வருவார்கள். நினைத்துப் பார்த்தால் சிரிப்பு வரும் காரணங்களாக இருக்கும். திரையரங்கில் தனக்கு முன்னால் போன பெண்ணை கணவன் உற்றுப் பார்த்தான், சிரித்தான், தன்னை விட்டுவிட்டு முன்னால் நடந்து விட்டான் என காரணங்கள் ஆளுக்கு ஒன்றாக விரியும். ’கூட்டத்துல ஒருத்தன் இடிச்சுட்டுப் போறான், அவன் இடிக்கிறதுகூட தெரியாம, அப்படி என்னடி ஆ ன்னு வேடிக்கை உனக்கு’ என்றும், ’சாப்பிட கூட்டிக்கிட்டு போனா சாப்பிடணும், அங்க வந்து இது இவ்வளவு காசா, ஒரு தோசை ஐம்பது ரூபாயான்னு வாயைப் பொளந்துகிட்டு…பட்டிக்காட்டு நாயைல்லாம் அதுக்குத் தான் கல்யாணம் பண்ணக்கூடாதுன்னு சொல்றது’ என்று கணவன்களும் அங்கலாய்த்துக் கொள்ள மனக் கசப்பிலேயே கழியும் எல்லா வெளியுலக பயணங்களும். நான்கைந்து நாள் சுற்றுலா செல்லும் குடும்பங்களின் சண்டைகள் பற்றி மட்டும் தனி நூலே எழுதலாம். திட்டமிடும்போதும், கிளம்பும்போதும் இருந்த ஆர்வமும், களிப்பும் போன இடம் தெரியாமல், காற்று போன பலூன்கள்போல் வீடு திரும்புவார்கள். இதில் சில ஆயிரங்கள் செலவானது மட்டுமே மிச்சமாக இருக்கும்.
தோற்றுப்போன அல்லது மலராமல் போன அன்புடன்தான் பெரும்பாலும் குடும்பங்கள் உள்ளன. விதிவிலக்குகள் எங்கும் உள்ளன. அதன் சதவீதம் முழுமையாக்கும் எண் அளவிற்குக்கூட இல்லை என்பதால், அதைப் பொருட்படுத்த வேண்டியதே இல்லை. தன்னுடைய ஓட்டுனர் முன்னால், தன்னை சத்தம் போட்டுப் பேசியதாகவோ, தன்னைப் பார்க்க வந்த முக்கியஸ்தர் முன்னால் சரியாக நடந்து கொள்ளத் தெரியவில்லை என்றோ வேறுபட்ட காரணங்கள் இருக்கவே செய்யும், இன்னும் கொஞ்சம் பொருளாதாரத்தில் உயர்ந்த இடத்திற்குப் போனால். புரிதல் உள்ள குடும்பங்களிலும் நூறு சதவீதம் இதுபோன்ற கருத்து மோதல்கள் இல்லையென்று சொல்ல முடியாது. வாய்விட்டுச் சொல்லிக் கொள்ளாமல் மௌனத்தில் புதைத்துக் கொள்வார்கள் தங்கள் முரண்பாடுகளை. மொத்தத்தில் கணவன் மனைவிக்கு இடையிலான உறவில் நூறு சதவீதம் புரிதலுடன்கூடிய அன்பென்பது வாய்ப்பே இல்லை.
ஆனால், அந்தப் புரிதலை ஏற்காமல், அப்படி ஒரு இடைவெளி இருக்கிறது என்பதே தெரியாமல் குடும்பங்கள் நல்ல நாடகத்தை நிகழ்த்துகின்றன. இரவு இரண்டாவது காட்சிக்கு தன்னுடைய நண்பர்களோடு குடித்துவிட்டுச் சென்று, திரையரங்கில் சிகரெட் பிடித்துக் கொண்டும், விசிலடித்துக் கொண்டும், பார்க்கும் பெண்களை பார்வையால் மேய்ந்து கொண்டும் இருக்கும் கணவன், அந்தப் படம் பார்த்துவிட்ட சுவடே தெரியாமல், அடுத்த நாள் மாலை முதல் காட்சிக்கு தன் மனைவி, குழந்தைகளுடன் திரையரங்கிற்கு வந்து அப்போதுதான் அந்தப் படத்தைப் பார்ப்பதுபோல், ரசித்துப் பார்ப்பான். தன் மனைவி, பெண் குழந்தைகளை யாராவது வைத்தக் கண் எடுக்கமல் பார்க்கிறார்களா என்று இடையிடையே காவலாளி வேலையும் சரியாக நடக்கும். இடைவேளையில் குழந்தைகளுக்கு பாப்கார்னும், ஐஸ்கிரீமும் வாங்கிக் கொடுப்பான். குரல் உள்ளடங்கி ஒரு நாகரீகத்தை சுவீகரித்து இருக்கும். குழந்தைகளுக்கு ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுத்து, மனைவிக்குத் தனியாக சமோசா வாங்கிக் கொண்டு வரும்போது, அவனுடைய சகா யாராவது எதிர்ப்பட்டு, ”டேய் மச்சான், என்னடா படத்துக்கா” என சத்தமாகக் கேட்டால், அவனின் தரத்திலிருந்து தான் மேம்பட்டவன் என்பதைக் காண்பிப்பதைப் போல், ”ஆமாம்ம்ம்ம், ஃபேமலியோட வந்திருக்கேன்’’ என சிரித்து, வழிந்து உடனடியாக அந்த இடத்தை காலி செய்யும் கணவனுக்கு என்ன பெயர் வைக்கலாம்?
கணவனுக்கு விதவிதமாக சமைத்துத் தருவதும், அழகாக துணி துவைத்து அயர்ன் செய்து தருவதும், அவனுக்குப் பிடிக்குமே என்று விடுமுறை நாட்களில் எல்லா விசேச உணவுகளையும் செய்து வைத்து திணற வைப்பதும் மனைவி செய்வதே. கணவன் வீட்டில் இருந்தால், பிள்ளைகள்கூட சத்தம் போடாமல் பார்த்துக் கொள்வது, வேலை முடிந்து தாமதமாக வந்தால், தூங்குவதற்கான அமைதியான சூழலை உருவாக்குவது, வாரம் ஒருமுறை தலைக்குத் தேய்த்துவிடுவது எல்லாம் செய்வாள். ஆனால், அவளின் இந்த அன்புக்குப் பின்னால், விளக்கின் கீழ் வளரும் கருநிழலென சந்தேகம் வளர்ந்து கொண்டே இருக்கும். கணவனின் சின்ன நடவடிக்கை மாற்றமும், அவன் சொல்லும் சிறுசிறு பொய்யும், மனைவிக்கு மிகப் பெரிய அடியாக இருக்கும். அவளின் மன உலகம் தன் கணவன் தன் கைவிட்டு வேறெங்கோ போய்விடப் போவதான கற்பனையான பயத்திலும் திகிலிலுமே இருக்கும். அன்பான பல மனைவிகள்கூட கணவனிடம் எல்லா நேரமும் சந்தேக தொனியிலான கேள்விகளால் வறுத்தெடுத்துக் கொண்டே இருப்பார்கள். வெளியில் வேலை முடித்து வீட்டுக்கு வந்து சேர்வதற்குள், ஒவ்வொரு கணவனுக்கும் குறைந்தது நான்கைந்து தொலைபேசி அழைப்புகளாவது வந்துவிடுகிறது. (சில கணவன்கள் மனைவிகளின் இச்செயலை ரசித்து அனுமதிக்கிறார்கள் என்பதும் உண்மையே. அதுவே உண்மையான அன்பின் வெளிப்பாடு என்ற புரிதலும் இதன் பின்னால் இருக்கு.)
கணவன், மனைவியின் அக-புற முரண்பட்ட நடவடிக்கைகளுக்குப் பின்னால் நமக்கு உடன்பாடான, நியாயமான காரணங்கள் ஏராளமாக இருக்கும்/ இருக்கின்றன. ஆனால், அக்காரணங்கள் பொருந்திப் போகக் கூடிய குடும்பங்களின் சதவீதம் மிகக் குறைவே. அக்காரணங்கள் தங்கள் குடும்பத்திற்குப் பொருந்தி வந்துவிடுமோ என்ற பயத்திலேயே பாதி குடும்பங்கள் தங்கள் உறவை, அன்பை அடமானம் வைக்கின்றன. மனைவிக்கு அழகு கணவனை சந்தேகிப்பதும், கணவனுக்கு அழகு மனைவியை பொத்திப் பாதுகாப்பதும் என்ற புரிதலே நம் குடும்பங்களின் ஆகச் சிறந்த அன்பாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.
ஒரு குடும்பத்தின் கணவன் மனைவி நடவடிக்கைகளை தள்ளி நின்று தீவிரமாகக் கண்காணித்தால், நம் உறவுகள் எவ்வளவு மோசமாக, அன்பற்ற அன்பினால் கட்டப்பட்டிருக்கின்றன் என்பது புரிய வரும். ஓர் ஒப்பந்தத்தில் சேர்ந்து வேலை செய்கின்ற அலுவலர்களுக்கு இருக்கும் குறைந்தபட்ச புரிதல்கூட குடும்பங்களில் இல்லை என்ற யதார்த்தம் பச்சை மாமிச வாடையாய் நம்மை முகஞ்சுளிக்க வைக்கும். ஆனால், அந்த முகஞ்சுளிக்க வைக்கும் நடவடிக்கையையே நாம் வெற்றிகரமான குடும்ப வாழ்வாகக் கொண்டாடுகிறோம். ’இதெல்லாம் ஒரு குடும்பஸ்தனுக்கு சகஜமப்பா’ என்று பெருமை பேசுகிறோம். நண்பர்களுடன் உட்கார்ந்து வெட்டி அரட்டை அடிக்கும் கணவனும், முக்கிய ஆலோசனையில் இருக்கும் அதிகாரி கணவனும், வீட்டில் இருந்து வரும் தொலைபேசி அழைப்பைப் பார்த்தால், லேசாக நடுங்குவதையும், சலித்துக் கொள்வதையும், இதுவரை வெளிப்பட்டுக் கொண்டிருந்த ஒரு சுதந்திர உணர்வு பறிபோன சோகத்தையும் வெளிப்படுத்துவதைப் பார்க்கலாம்.
எல்லா உண்மையும் தெரிந்த நண்பர்களைப் போல், எல்லா துயரங்களையும் பகிர்ந்து கொள்ள முடிந்த உறவைப் போல் கணவனும் மனைவியும் இருக்கவே முடியாதா? காதல் திருமணம் செய்தவர்கள்கூட திருமணத்திற்குப் பிறகு அப்படி இருக்க முடியவில்லை என்கிறார்களே ஏன்? குடும்பம் என்ன மாய ரசவாதத்தை நம்மில் நிகழ்த்துகிறது. உயிரற்ற ஓர் அமைப்பு, வடிவற்ற ஒரு நிறுவனம், கண்ணுக்குப் புலனாகாத தன்னுடைய சட்ட திட்டங்களின் மூலம் ஆண் பெண்ணின் அடிப்படை அன்பை களவாடிவிட முடியுமா? இயற்கை தந்துள்ள இனக் கவர்ச்சியை வழித்தெறிந்துவிட்டு நிரந்தர பகையாளிகளாக்கிவிட முடியுமா? வெறும் கடமைக்காக ஓடும் இயந்திரங்களாக மாற்றி தனிமனித சுதந்திரங்களை நசுக்கி எறிய முடியுமா?
ஆம். முடியும். குடும்பங்களால் முடியும். குடும்பத்திற்குள் நடமாடிக் கொண்டிருப்பவர்களில் பெரும்பான்மையோர் சமூகத்தின் நற்பெயருக்காகவும், குழந்தைகளின் எதிர்காலத்திற்காகவும் தான் கசப்பான வாழ்வைப் பொறுத்துக் கொண்டிருக்கிறார்கள். இவ்வளவு கசப்பை ஒவ்வொருவரும் தாங்கிக் கொண்டிருந்தாலும், குடும்பத்தை விட்டு வெளியேறும் ஒவ்வொருவரையும், ஒவ்வொருவரும் நகையாடுவோம். தூற்றுவோம். ஏளனம் செய்வோம். அங்கீகாரம் மறுப்போம். வாழ்வில் தோற்றவரின் இழிநிலையை சுமத்துவோம். நம்மின் பலவீனத்தினால்தான் குடும்பத்தின் வன்முறை இன்னும் வளர்கிறது.
நாம் மகிழ்ச்சியாகப் பயணிக்கத் தேர்ந்தெடுக்கும் வாகனத்தை, தோளில் தூக்கிச் சுமந்து கொண்டு செல்லும் நிலை வருவது பெரும் துயரம். அப்படி ஒரு நிலை வந்த பிறகும் அயராது, வாகனத்தைத் தூக்கிச் சுமப்பவர்களுக்கே நம் அகராதியில் குடும்பஸ்தர் என்று பெயர்.
குடும்பம் நடத்தும் இந்த சதி செயலில் பகடைகள் கணவன் மனைவிகள் என்றுதானே நீங்கள் நினைக்கிறீர்கள்…இல்லை..உண்மையான பகடைகள் குழந்தைகளே….

Bookmark the permalink.

2 Responses to மலராமல் போன அன்பு – எங்கிருந்து தொடங்குவது – 5

 1. Rajeswary Vadivelu says:

  Well said

 2. Nalliah Thayabharan says:

  “ஆதலினால் காதல் செய்வீர்”
  இந்தப் பிரபஞ்சத்தில் அழகான பூமி, அற்புத வாழ்க்கை எல்லாம் கிடைப்பது ஒரு அபூர்வமான விடயம். இவ்வுலகில் இனிய வாழ்வு என்பது ஓர் வரம். வாழ்க்கை சிறப்பாய் வாழ்வதற்கு அன்பு, காதல் மிக அவசியம்.
  யாயும் ஞாயும் யார் ஆகியரோ?
  எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
  யானும் நீயும் எவ் வழி அறிதும்?
  செம்புலப்பெயல் நீர்போல
  அன்புடைநெஞ்சம் தாம் கலந்தனவே
  என்று குறுந்தொகையில் உள்ள 40வது பாடலான குறிஞ்சித்திணைப் பாடலில் கூறியுள்ளவாறு பல்லாயிரம் ஆண்டுகளாக எங்கள் மத்தியில் இருந்த காதல், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் குழந்தைத் திருமணம் நடைமுறைக்கு வர, எங்கள் மத்தியில் காதல் அருகி, காதல் கசப்பானதொன்றாக மாறி, இன்று திரைகடல் ஓடி திரவியம் தேடுவதில் வல்லவர்களான நாம், இதயத்தில் என்றும் உயிர்த்திருக்கும் காதல் என்பது எதுவென்றே அறியாது, புரியாது வாழ்கின்றோம்.
  கலாச்சாரத்தில் கடந்த பல நூற்றாண்டுகளாக விட்டது. இரண்டாயிரம் வருடங்களுக்கு முன், அரசாட்சிகளின் அடித்தளமான உறுதியான சமூக அடுக்கதிகாரம், சாதி சார்ந்ததாக மாறியதையடுத்து இந்தியாவில் சாதி அதிகாரமும், சாதிப் பிரிவினையும், படு மோசமானதாக உருவாகி, சாதி அடையாளங்களை மீறுவது பலமாகத் தடுக்கப்பட்டு, அதற்காகவே குழந்தை வயதில் கல்யாணம் என்பது நடைமுறையாகி, இரண்டாயிரம் வருடங்களாக நாங்கள் காதல் என்றால் என்னவென்று தெரியாது வாழ்கின்றோம். இதனால் எங்களுக்குத் தெரிந்ததெல்லாம், நேசமும், மனம் லயிக்கும் நெருக்கமும் இல்லாமல், இதயங்கள் இணையாது ஏதோ அவசரகோலத்து சம்பிரதாய சடங்குபோல வெறும் உடல்கள் மட்டும் இணைந்த ஒரு உடலுறவு மட்டுமே. இதனால்தான் “ஆதலினால் காதல் செய்வீர்” என அறை கூவினான் பாரதி.
  ஒரு ஆணும் ஒரு பெண்ணும் தமக்குப் பிடித்த துணையை, தாமே தேடிக் கொள்வதுதான் உண்மையான காதல். வாழ்நாள் பூராக நீடிக்கும் காதல் உறவைத் தேடிக்கொள்ள கடந்த இரண்டாயிரம் வருடங்களாக எங்களுக்கு தடை போடப்பட்டுள்ளது.
  கல்யாணப் பொருத்தத்தில் சாதி, பணம், சொத்து, அழகு, கல்வியறிவு, பதவி என பலவற்றை பார்த்த நாங்கள், கல்யாணம் செய்ய விரும்புபவர்கள் உண்மையாக ஒருவரை ஒருவர் விரும்புகிறார்களா? என்று பார்த்தது கிடையாது. ஒருவரை ஒருவர் விரும்புவதற்கு, ஒருவரோடு ஒருவர் பழகாமல் விருப்பம் வரவும் முடியாது. எங்கள் பாரம்பரிய கல்யாணங்களில் கழுத்தில் தாலி ஏறிய பின்னர்தான் கணவன் மனைவியை ஒருவரோடு ஒருவர் பழக அனுமதிக்கின்றோம். ஒரு ஆணும் பெண்ணும் தமக்கிடையே அன்பைப் பகிருந்தோறும், இருவரும் நெருங்கிப் பழகுந்தோறும், உள்ளத்தையும் அன்பையும் பகிர்ந்து கொள்வதால் வளரும் ஓர் உறவுதான் உண்மையான காதல்.
  எங்களுடன் ஒத்துப் போகின்ற நண்பர்களோடு மட்டும்தான் நாங்கள் மனம்விட்டு பேசுவோம். எங்கள் கருத்துக்களோடு ஒத்துப்போகாத, எண்ணங்களோடு இணைவு இல்லாத ஓருவரோடு, சில நிமிடங்களுக்குப்பின் எதையுமே பேசவே முடிவதில்லை. அப்படி ஒத்துப்போகாத, இணைவு இல்லாத ஒருவரைக் கல்யாணம் செய்து எப்படி வருடக்கணக்கில் உறவைத் தொடர முடியும்?
  பகிர்ந்துகொள்ள ஒரு பொதுத் தளம் இல்லாத நிலையில், நம் மத்தியில் கணவன் மனைவிக்கிடையில் வெறுமையான உரையாடல்களுடன் எங்கள் கல்யாணங்கள் எல்லாம் வெறும் ஒப்புக்கு போலியாக வெறும் சம்பிரதாயங்களுக்கும் கடமைக்கும் கணவன் மனைவி எனக் குறுகி, இறுதி வரை தொடர்கின்றன. இயந்திரமயமான வாழ்க்கை முறை தம்பதிகளிடையேயான மனோரீதியான நெருக்கத்தை வெகுவாகக் குறைப்பதால், ஏதாவதொரு பொதுவான விஷயத்தை தேர்ந்தெடுத்து அதை சேர்ந்து ரசிக்கும் பழக்கத்தை தம்பதிகள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
  கல்யாணத் தரகர்களால் தீர்மானிக்கப்பட்ட திருமணத்தில், திருமணம் முடியும்வரை ஒருவரை ஒருவர் பார்த்து ஒரு வார்த்தை கூட பேசியிருக்க வாய்ப்பிருக்காது. ஆனால் காலத்தின் கட்டாயமாக வாழ்நாள் முழுவதும் சேர்ந்து வாழ வேண்டிய ஒரு சூழலுக்குத் தள்ளப்பட்டு, சமுதாயத்தின் கட்டாயத்திற்காக சேர்ந்து வாழும் பெரும்பாலான தம்பதியர்கள், கடமைக்காக கணவன்-மனைவியாக வாழ்கின்றனர். கல்யாணமாகி கொஞ்சக் காலம் சென்ற பின் கணவன் மனைவிக்கிடையில் பில் கட்டினதா? பால் வாங்கினதா? என சில சொற்களுக்கு மேல் கணவன்-மனைவிக்கிடையில் உரையாடும் குடும்பங்கள், எங்கள் மத்தியில் மிக மிக அரிது.
  கருத்து வேறுபாடுகளும், தவறாக புரிந்துகொள்ளுதலும், கணவன் மனைவிக்கிடையில் நாளடைவில் அதிக வெறுப்பை உருவாக்குவதால், கணவன் மனைவிக்கிடையில் மனம் விட்டுப் பேசி காதல் வளராது, வாழ்க்கை பூராக காதலுக்கான நீங்காத ஏக்கத்துடன், தொலைக்காட்சியிலும், கணணித் திரையிலும், கதைப் புத்தகங்களிலும், வெறும் கற்பனையில் காதலைப் பார்த்துவிட்டு, எங்கள் வாழ்க்கையைத் தொலைத்து நாங்கள் மரணித்துப் போய்விடுகின்றோம்.
  காதல் என்பது ஒருநாள் விடயமல்ல. ஒவ்வொரு நாளும் காதல் உயிர்ப்போடு இருக்கவேண்டும். ஒருபோதும் வற்றாத ஜீவநதி அன்பு மட்டும்தான். உண்மையான காதலில்தான் அன்பு இருக்கும். மனம்விட்டுப் பேசுவதை வழக்கப்படுத்திக் கொள்ளாத கணவன் மனைவிக்கிடையில் நெருக்கமிராது. கல்யாண வாழ்வில் காதல் இல்லாத காரணத்தால், மனம் அன்பிற்காக ஏங்கத் தொடங்கி விபரீதமான விளைவுகளுக்கு வழி சமைக்கும். எதற்கெடுத்தாலும் எரிந்து விழுவதும், குதர்க்கமாகப் பேசுவதும், குத்திக்காட்டுவதும், அன்பு இல்லாத போலியான உறவுகளில்தான் இருக்க முடியும். நறுமணமான அழகான பூக்கள் கூட காதலிக்கத் தெரியாதவரின் கையிலோ, கழுத்திலோ, கூந்தலிலோ இருப்பதை விட காதலிக்கத் தெரிந்தவரின் கல்லறைமேல் இருப்பதே மேல்.
  தம்பதிகள் தமக்கிடையில் கோபப்படும்போது, அவர்களின் இதயங்களுக்கு இடையிலான இடைவெளி அதிகரித்து விடுவதால், அந்த இடைவெளியினில் பேசுவது கேட்க வேண்டும் என்பதற்காக, இருவரும் சத்தமாக உரத்த குரலில் பேசுவர். எவ்வளுக்கெவ்வளவு கோபம் கூடுகின்றதோ, அவ்வளவு அதிகமாகச் சத்தம் தேவைப்படுகிறது. அன்பு வயப்பட்ட காதலர்கள் பேசும் போது, உரக்க சத்தம் போட்டு பேசவேண்டிய தேவை இல்லை, ஏனெனில் அவர்களின் இதயங்களுக்கு இடையேயான இடைவெளி மிகவும் குறைந்து விடுகிறது. மனமொத்த இணைபிரியா காதலர்கள் தமக்குள் பேசவேண்டிய அவசியம் கூட இருப்பதில்லை, ஏனெனில் அங்கு இதயங்களுக்கு இடையே இடைவெளியே இருக்காது. இதயங்கள் இடமாறிவிட்ட காதலர்களுக்கு வார்த்தைப் பரிமாற்றமே தேவைப்படுவதில்லை,
  இறுகிப்போன எங்கள் கலாச்சாரத்தில், இன்னமும் காதல் செய்வது தடை செய்யப்பட்ட ஒன்றாக இருப்பதனாலேயே, அது இரகசியமானதாகவும், மற்றவர்களால் வேவு பார்க்கப்படும் ஒரு நிகழ்வாகவும் இருக்கின்றது. இன்னமும் உண்மையான காதல் என்றால் என்னவென்று எங்களுக்கெல்லாம் தெரியாததால் ஒரு ஆணும் பெண்ணும் தற்செயலாக அருகில் பழக நேர்ந்தாலே எங்களில் பலர் அதனைக் காதல் என எண்ணி, கல்யாணம் செய்து கொள்கின்றார்கள். இதனால் காதலை நிதானமாக அணுக முடியாத நிலையில், கண்டவுடன் ஏற்பட்ட வெறும் கவர்ச்சியே, கல்யாணமாக நிறைவேறி பின்னர் தீராத பிரச்சனைகளாக இறுதி வரை தொடர்கின்றன.

  எங்கள் பிள்ளைகள் தங்கள் சூழலை மிகவும் கூர்மையாகக் கிரகித்துக் கொள்வதால் எங்கள் பழக்க வழக்கங்கள், பண்புகளிலிருந்து அவர்கள் நிறையக் கற்றுக் கொள்கின்றனர். தமது தாயும் தகப்பனும் ஒருவரை ஒருவர் பாசத்துடன் நேசிப்பதில்லை என்பதையும் அவர்கள் மத்தியில் வெறும் சண்டையும் கோபமும்தான் இருக்கின்றன என்பதையும் பிள்ளைகள் வெகு இலகுவாகத் தெரிந்து கொள்கின்றார்கள். தமது தாய் தந்தையரின் வாழ்க்கையில் அவர்களுக்கிடையில் அன்பும் பாசமும் இருந்திடாத நிலையில், எதிர்காலத்தில் தமது திருமணவாழ்வில் எவ்வாறு அன்பு பாசம் இருக்க முடியும் என நம்பாத சூழ்நிலை எங்கள் பிள்ளைகள் மத்தியில் உருவாகின்றது. தம் பெற்றோர்களுக்கிடையில் காதலும் அன்பும் பாசமும் இல்லை என்று கண்டு கொள்ளும்போது, தமது திருமண வாழ்விலும் காதலும் அன்பும் பாசமும் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு என்று எம் பிள்ளைகள் எண்ணத் தொடங்குவர்.
  தமது தாயும் தந்தையும் ஆழ்ந்த அன்பில் ஆழமான காதலில் ஒருவர் மீது ஒருவர் அக்கறையும் மரியாதையும் செலுத்தி வாழ்வதை தமது கண்கூடாகப் பார்க்கும்போதுதான் தமது திருமண வாழ்விலும் காதலும் அன்பும் இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் எங்கள் பிள்ளைகள் மத்தியில் உருவாகும்.
  எமது உணர்வுகளில் ஒன்றான “கோபம்” அன்பின் காரணமாக வெளிப்படும்போது அக்கோபத்தின் தாக்கம் குறைவாக இருக்கும். ஆனால் ஆணவத்தின் காரணமாக கோபம் வெளிப்படும்போது, அதன் தாக்கமும் விளைவுகளும் படுமோசமாக அமைந்து விடுகின்றன.

  அன்பு நிறைவான ஒரு அறக்கட்டளை. உண்மையான அன்பு ஒருபோதும் தன்னலம் நாடாது. சினம் கொள்ளாது.

  மற்றவர்களுக்கு பயன்கருதாது. உதவி செய்யும்போது, மற்றவர்களுக்கு சுகத்தை அளிக்க முடியும்போது, சந்தோஷப்படுவதுதான் உண்மையான அன்பு. அன்பு எப்போதுமே கொடுத்துக்கொண்டேயிருக்கும். அன்பு மலருமிடத்தில், பாசம் மிளிருமிடத்தில் ஆணவத்திற்கும், அதிகாரத்திற்கும், ஆதிக்கத்திற்கும் இடமில்லை. அன்பாக இருப்பதே மனிதரில் இயற்கையாகவே இருக்கின்ற இயல்பான தன்மை. பரிவு, இரக்கம், கருணை, நட்பு என்று பலவகையான குணங்களின் ஒட்டு மொத்தமான அன்பை வளர அனுமதித்தால் போதும். அதுவாகவே பொங்கி வழியும்.

  மற்றவர்களுக்கு கஷ்டத்தைக் கொடுக்கும்போது மட்டுமே சந்தோஷப்படுவதுதான் ஆணவம். எப்பொழுதும் சுயநலத்தில் குறிகொண்டதாகவே இருக்கும். ஆணவம், தமக்கு ஏதாவது காரியம் ஆகவேண்டும் என்றால் மட்டுமே மற்றவர்களைத் தேடி வரும். ஆணவத்திற்கு மற்றவர்களிடமிருந்து எடுத்துக்கொள்ளவும் மற்றவர்களைக் கெடுத்துக் கொள்ளவும் மட்டும்தான் தெரியும். ஆணவம் எங்கெல்லாம் ஆதிக்கம் செய்கிறதோ அங்கெல்லாம் குழப்பமும், வெறுப்பும், உருவாகி வன்முறை தலைவிரித்தாடி இறுதியில் அழிவே மிஞ்சும்.

  அன்பும் காதலும் இல்லாத கணவன் மனைவிக்கிடையில் பேச்சிலும், எண்ணத்திலும், செயலிலும் மோசமான எதிர்மறையே ஏகோபித்திருப்பதால், தமது பிள்ளைகளிடம் எதை எப்படிச் செய், எது நல்லது, எதுசிறந்தது என்று இனிமையாகச் சொல்லி சரியாக வழிகாட்டாது, “அடி வாங்குவாய்,” “வந்தனென்றால் தெரியமா வாங்கிக் கட்டுவாய்,” “போய்த் தொலை,” “அப்பா வந்து சாத்துவார்” என்றெல்லாம் கடுமையான கொதியிலும் கோபத்திலும் ஆவேசமாகப் பேசுகின்றார்கள்.
  ‘ஓத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான் செத்தாருள் வைக்கப்படும்” என்று திருவள்ளுவர் கூறினார்.
  அன்பு கணவன் மனைவிக்கிடையில் இருந்தால் எதையும் ஆணவத்தின் நோக்கத்தோடு பார்க்க மாட்டார்கள். .அன்பு வற்றும்போது போது அங்கு ஆணவம் மேலோங்குகின்றது. .அன்பு வளரும் போது “தான், தன்” என்ற நிலைமாறி “நாம்” என்ற நிலை வரும். ஆனால் கணவன் மனைவிக்கிடையில் ஆணவம் வளரும் போது “நாம், நம்மில்” என்ற நிலை மாறி “தான்” மட்டும் என்ற நிலை உருவாகி இறுதியில் தவிர்க்க முடியாதவாறு பிரிந்து விடுகின்றார்கள்.
  பெரும்பாலான கணவன் மனைவியர் தங்களை மிக நியாயமானவர்களாக நினைத்துக் கொள்வதோடு கொண்டிருக்கிறார்கள். கணவன் மனைவியர் ஒவ்வொருவரினதும் பெரிய வருத்தமும் குறையும் மற்றவர் தம்முடன் நியாயமாக நடந்து கொள்வதில்லை என்பதுதான். நியாயமாக நடந்து கொள்ளவில்லை என்று யாரை குறை சொல்கிறார்களோ அவர்களும் தங்களை மிக நியாயமானவர்களாகவே நினைத்து மற்றவர் தம்முடன் நியாயமாக நடந்து கொள்வதில்லை என வருந்துவதுதான் ஆச்சரியம். இதில் எவர் சரி, எவர் தவறு? என்று ஆராய்ந்தால் ஒவ்வொருவரும் வைத்திருக்கும் மாறுபட்ட அளவுகோல்கள் தான் காரணம் என்பது புரியும்.

  எங்கள் மொழி, இனம், மதம், நாடு ஆகியவற்றின் மீது எங்களுக்கு இருக்கும் அபரிமிதமான பற்றிற்குப் நாம் வைக்கும் பெயர் பக்தி. ஆனால் மற்றவர் அவர் மொழி, இனம், மதம், நாடு ஆகியவற்றில் வைக்கும் அபரிமிதமான பற்றிற்கு நாம் வைக்கும் பெயர் வெறி.
  நாங்கள் அடைந்த வெற்றிகள், தேடிக் கொண்ட சொத்துக்கள் எல்லாவற்றையும் அடுத்தவர்களுக்கு பறைசாற்றத் துடிக்கிறோம். அடுத்தவர்கள் அதனைத் தெரிந்து புரிந்து கொண்டு எங்களை பாராட்ட வேண்டுமென்று எதிர்பார்க்கிறோம். ஆனால் அடுத்தவர்கள் நம்மிடம் அதையே செய்தால் அது அவர்களின் தற்புகழ்ச்சியாகத் தெரிகிறது. மற்றவர்கள் எங்கள் அருமை பெருமைகளை அறிய மறுத்தால் அது அவர்களின் சின்ன புத்தியாகவோ, பொறாமையாகவோ எங்களுக்கு தெரிகிறது. ஆனால் அடுத்தவர்களுடைய அருமை பெருமைகளை அறிய எங்களுக்கு எதுவித ஆர்வமுமிருப்பதில்லை. எங்கள் சாதனைகளுக்கும் வெற்றிகளுக்கும் காரணம் எங்கள் புத்திசாலித்தனமும், உழைப்பும் தான் என நாங்கள் எண்ணும் அதேவேளை மற்றவர்களுடைய வெற்றிகளுக்குக் காரணம் அவர்களது அதிர்ஷ்டமும், அவர்களுக்குக் கிடைத்த ஆதரவும் என எண்ணுகின்றோம். அதுவே தோல்வியானால் அந்த அளவுகோல்கள் உடனடியாக பரிமாற்றம் செய்யப்படுகின்றன. எங்கள் தோல்விக்குக் காரணம் துரதிர்ஷ்டமும் சூழ்நிலையும். என்றும் மற்றவர் தோல்விக்குக் காரணம் அவர்களது முட்டாள்தனமும், முயற்சிகளில் உள்ள குறைபாடுகளும் என்று எண்ணுகின்றோம்.
  எங்கள் சொந்த வீட்டு இரகசியங்களை படாதபாடுபட்டு மூடிவைத்து மற்றவர்கள் அறிந்து விடக்கூடாதென்று மிகவும் கவனமாக இருக்கிறோம். ஆனால் மற்றவர்களின் இரகசியங்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வர நாங்கள் தயங்குவதேயில்லை. அடுத்தவர்கள் தமது இரகசியங்களை மறைக்கச் செய்யும் முயற்சிகளைப் பெரிய குற்றமாக நாங்கள் விமரிசிக்கின்றோம்.
  மற்றவர்கள் உதவ முடிந்த நிலையில் இருந்தாலும் எங்களுக்கு உதவுவதில்லை என்று மனம் குமுறும் நாங்கள் அடுத்தவர்களுக்கு உதவ முடியும் நிலையில் நாங்கள் இருக்கும் போது கண்டும் காணாமல் போய் விடுகிறோம். அந்த நேரத்தில் நாம் அதைப்பற்றி சிந்திப்பதேயில்லை.
  தங்கள் பெற்றோரை அலட்சியம் செய்தும், புறக்கணித்தும் சிறிதும் மன உறுத்தல் இல்லாமல் இருக்கும் நாங்கள் எங்கள் குழந்தைகள் அதையே செய்தால் தாங்க முடியாத துக்கத்தில் ஆழ்ந்து விடுகின்றோம். எங்களுக்கு தகுந்தாற்போல் எல்லாவற்றையும் அளப்பதும் எடைபோடுவதும் எங்களிடம் ஆழமாக வேரூன்றி இருக்கிறது.
  எங்கள் மத்தியிலுள்ள பல பிரச்சனைகளுக்குக் காரணம் இந்த அளவுகோல் வித்தியாசங்களே. சுயநலம் மிக்க உலகாய் நாம் இந்த உலகத்தைக் காணும் அதேவேளை சின்னச் சின்ன விஷயங்களில் கூட நாங்களும் அதே போல் இருக்க முற்படுகிறோம் என்பதை உணரத் தவறுகிறோம். எங்களுக்குள் இரண்டு விதமான அளப்பீடுகளை நாம் நமக்குள் வைத்திருப்பதால்தான் நாங்கள் தவறுகள் செய்தாலும் அந்த உணர்வே இல்லாமல், அந்த உண்மையே நமக்கு உறைக்காமல் இருக்க முடிகின்றது.
  தம்பதிகள் தமக்கிடையில் ஒரே அளவுகோல் வைத்திருந்தால் மட்டுமே உண்மையாக ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு காதல் வளரும். பாசமான அன்பு, பரிசுத்தமான நேசம், ஆத்மார்த்தமான காதல் இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து என்ன பயன்?
  காதலை சரிவர அணுகவும், நிதானமாக முதிர்ச்சியுடன் எதிர்கொள்ளவும் தேவையான அனுபவத்திற்கு காதலை சாதாரணமாக அணுகும் பாசத்தையும், நேசத்தையும் பெருக்கிக்கொள்ளும் கலாச்சாரம் தேவை. காதலை சாதாரணமாக அணுகும் கலாச்சாரம் ஆரோக்கியமான சமூகங்கள் மத்தியில் இருக்கின்றது. பொருத்தமான கணவன் மனைவி உறவுகளே நிறைவான ஆரோக்கியமான ஒழுக்கமான சமூகங்கள் உருவாக வழிசமைக்கும்.
  -– நல்லையா தயாபரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *