கேள்விக்கு என்ன பதில்

ஆர். வைத்தியலிங்கம், திருநின்றவூர்.

கே: வள்ளலார் வலியுறுத்தும் நால்வகை ஒழுக்கங்களை விளக்குவீர்களா?

ப: இந்திரிய ஒழுக்கம், கரண ஒழுக்கம், ஜீவ ஒழுக்கம், ஆன்ம ஒழுக்கம் என்று நாம் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்கத்தை வள்ளலார் நான்கு பிரிவுகளாகப் பகுத்தார். தீயனவற்றைக் கேளாதிருத்தல், அசுத்தங்களைத் தீண்டாதிருத்தல், கொடியனவற்றைப் பாராதிருத்தல், பொய் சொல்லாதிருத்தல், மனம் – வாக்கு, மெய்யால் பிறவுயிர்களுக்கு உதவியாயிருத்தல் போன்றவை இந்திரிய ஒழுக்கங்கள். கடவுள் ஒருவரே என்று உறுதி கொண்டு, அந்தக் கடவுளிடத்தில் மனதை நிறுத்தல், பிறர் குற்றங்களைக் காணாதிருத்தல், தன் பெருமை போற்றாதிருத்தல், எந்தச் செயலிலும் எல்லை மீறாதிருத்தல் என்பனவே காரண ஒழுக்கங்கள். சாதி-மதம்-கோத்திரம்-சாத்திரம் என்று எந்தவகையிலும் மனிதரிடத்துப் பேதம் பாராட்டுவதைத் தவிர்த்தலே ஜீவ ஒழுக்கம். எல்லா உயிர்களிலும் இறைமையைக் கண்டு, பேதமற்று எல்லாம் தானாக நிற்றலே ஆன்ம ஒழுக்கம் ஆகும்.

எம். வேதமுத்து, ஸ்பிக் நகர், தூத்துக்குடி

கே: மெய்பொருள் என்பது யாது? அதனை அடையும் மார்க்கம் எது?

ப: ‘மெய்ப்பொருள் காண்பது அறிவு’ என்கிறது வள்ளும். ஒன்றை வேறொன்றாக அறியும் பொய்யறிவு கொண்டவர்கள் நாம். சாதாரண பொருளையே சரியாக அறிந்து தெளிவாகப் புரிந்துகொள்ளமுடியாத நாம் மெய்ப்பொருளை எளிதில் கண்டுவிட இயலாது. ‘மெய்ப்பொருள் காண்பது’ என்றால் உண்மையை அறிவது. எதிர்நிலையைக் கொண்டே மனித மனம் எதனையும் அறிந்து கொள்ளும். இருட்டைக் கொண்டு ஒளியை அறிவது போல், பொய்யைக் கொண்டே மெய்யை உணர முடியும். உலகில் உள்ள அனைத்துப் பொருள்களும் அழியும் அழியக் கூடிய அனைத்தும் பொய். அழியாத ஒன்றே பரம்பொருள். அதுவே மெய். அழியும் இந்த உடம்பைக் கொண்டு அழியாத அந்தப் பரம்பொருளை அடைவதற்கு ஒரே வழி அதுவாகவே ஆகிவிடுதல். அதுதான் உபநிடதம் உரைக்கும் ‘தத்துவமகி’. ‘தத்’ என்றால் அது. ‘த்வம்’ என்றால் நீ. ‘அசி’ என்றால் ஆகிவிடுகிறாய்.

 

ஆர்.கே. லிங்கேசன். மேல கிருஷ்ணன் புதூர்.

கே: இளைஞர்களில் ஒரு பகுதியினர் குடிப்பழக்கம் உள்ளவர்கள் என்று நீங்கள் கூறியதை ஜூ.வி. அபத்தம் என்கிறதே…?

ப:  ஜல்லிக் கட்டுக்காக மெரினாவில் கூடியவர்களில் பாதிப் பேர் குடிப்பவர்கள் என்றோ, பாலியல் வன்முறையில் ஈடுபடக்கூடியவர்கள் என்றோ, மதுப் புட்டிகள் அங்கே குவிந்து கிடந்தனவென்றோ நான் எங்கும் கூறவில்லை. ஆனால், இன்றைய இளைஞர்களில், மாணவர்களில் கணிசமானவர்கள் மதுவின் மயக்கத்திற்கு ஆட்பட்டவர்கள் என்பது மறுக்கமுடியாத ஒரு கசப்பான உண்மை. வாக்கு வங்கிக்காக நாக்கு யாகம் நடத்துபவனில்லை நான். என்னுடைய நெஞ்சத் தெளிவும் நேர்மைத் துணிவும் கழுகாருக்கு அபத்தமாகப் படுகிறது. ஜல்லிக்கட்டுக்காவும், ஹைட்ரோ கார்பனுக்காகவும் கூடிய இளைஞர்களும் மாணவர்களும் மதுக்கடைகள் முன்பு ஏன் இலட்சக் கணக்கில் திரளவில்லை? பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால், கொட்டைப் பாக்குக்கு விலை சொல்வதா ஊடக தர்மம்?

சுந்தரமூர்த்தி, மயிலை, சென்னை.

கே: இனி பாடமாட்டேன் என்று அறிவித்துவிட்ட எஸ். ஜானகியின் ஆகச் சிறந்த பாடல்களாக எவற்றைக் குறிப்பிடுவீர்கள்?

ப: தேனில் தோய்த்த குரல் ஜானகியின் குரல். பிசிறில்லாமல் எந்த உச்சத்தையும் தொடக்கூடிய இனிமையான குரல் அவருக்கு வாய்த்த வரம். வாரத்தில் ஒரு நாளாவது அவருடைய ஆகச் சிறந்த ஐந்து பாடல்களை இரவுப் பொழுதில் மங்கிய ஒளியில் மெல்லிய ஒலியில், தன்னந்தனிமையில் தவறாமல் நான் கேட்பேன். அந்த நேரத்தில் ஜானகி தொழத்தக்க இராகதேவதையாகவும், நான் கசிந்துருகும் ஓர் உயரிய உபாசகனாகவும் உருமாறிவிடுவோம். 1. தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே (ஆலயமணி) 2. உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் (அவளுக்கென்று ஒரு மனம்) 3. காற்றுக்கென்ன வேலி (அவர்கள்) 4. கண்ணிலே என்ன உண்டு (அவள் ஒரு தொடர் கதை) 5. உந்தன் ராஜசபை இங்கு வாராதோ (கறுப்புப் பணம்). இவை அனைத்தும் இளையராஜாவின் வருகைக்கு முன்பே கண்ணதாசனும் விஸ்வநாதனும் ஜானகியும் சேர்ந்தளித்த கந்தர்வ கானங்கள். எனக்காக ஒரு முறையாவது இந்த ஐந்து பாடல்களையும் ஒன்றன்பின் ஒன்றாய் கேட்டுப் பாருங்கள் உங்கள் மனம் சிறகு பூட்டிப் பிரபஞ்ச வெளியில் பரவசத்துடன் பறப்பதை உணர்வீர்கள்.

 

எம். காளிதாஸ், சேலம் – 1.

கே:  ரஜினிகாந்த் தமிழரில்லை. தமிழன்தான் நாடாளவேண்டும் என்கிறார்களே… சரியா?

ப: கடந்த 50 ஆண்டுகளுக்கு மேல் இரண்டு திராவிட கட்சிகளின் ஆட்சிகளிலும் அமைச்சர்களாக இருந்தவர்களும், இருப்பவர்களும் பெரும்பாலும் பச்சைத் தமிழர்கள்தானே! ஊழல் மலிந்த இந்த மனிதர்கள் தமிழர்கள் என்பதற்காகப் புனிதர்களாக ஆண்டுவிட்டார்களா? சுரண்டுபவர்கள் தமிழர்களாக இருப்பதே போதுமென்கிறார்களா? என் வீடு புகுந்து திருடுபவர்கள் வேற்று மொழிக்காரர்களாக இருக்கலாகாது. தமிழர்கள் திருடினால் தடையில்லை’ என்று வாசலில் அறிவிப்புப் பலகையை இவர்கள் வைப்பார்களா? அரசியலில் இருப்பவர்கள், ஆட்சி நாற்காலியில் அமர்பவர்கள் சுயநலம் துறந்த உண்மையான ஊழியக்காரர்களாக மக்கள் பணியாற்றுவார்களா என்பதுதான் முக்கியம். பன்னீர் செல்வம் பச்சைத் தமிழர், ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் தமிழரில்லை. ஓமந்தூரார் என்ற துறவியின் நிழலில் கூட ஒதுக்கும் தகுதி பன்னீர் செல்வத்திற்கு இல்லையென்பதுதானே சத்தியம். இன்றைய தேவை ஓமந்தூரார்கள்; பன்னீர்செல்வங்கள் இல்லை. பதவிக்குத் தேவை நேர்மையும் உண்மையும்; சாதியும் இனமும் இல்லை.

 

தமிழ்ச்செல்வி முருகேசன், கடலூர் முதுநகர்.

கே:  ரஜனி நிச்சயம் அரசியலுக்கு வருவாரா?

ப: அவர் வருவது நிச்சயமாகிவிட்டது. திரையுலகில் விளம்பர வெளிச்சத்தில் இருந்தவர்கள், வயதானபின்பு இருட்டில் இருக்க விரும்பாமல், வயது வரம்பு இல்லாத அரசியலில் அடியெடுத்து வைக்க விரும்புவது இயல்பு. எம்.ஜி.ஆர். என்.டி.ஆர். ஜெயலலிதா, விஜயகாந்த், என்று யாரை எடுத்துக்கொண்டாலும் வயது முதிர்ந்து மார்க்கெட் சரிந்த பின்பே முழுநேர அரசியல்வாதிகளாக மாறினர். இதில் ரஜினியும் விதிவிலக்கு அன்று. அவர் அரசியலுக்கு வருவது அவருடைய ரசிகர்களுக்கு நல்லது; வராமல் இருப்பது அமைதியை நாடும் அவருக்கு மிகவும் நல்லது.

என். தேவகுமாரன், திருச்சி

கே: நீங்கள் தமிழக முதல்வரைச் சந்தித்தது ‘தமிழ் இந்து’ நாளிதழைத் தவிர வேறு எந்த இதழிலும், தொலைக்காட்சியிலும் வெளிப்படுத்தப்படவில்லையே… ஏன்?

ப: சாதி, மதம், இனம், மொழி ஆகியவற்றின் மூலம் மக்களின் உணர்வை வெளியாக மாற்றிப் பிரித்தாளும் அரசியலில் நான் ஈடுபடாதது முதல் குற்றம். கடந்த ஐம்பதாண்டுகளில் கள்ளச் சாராயம் காய்ச்சியோ, கல்விக்கொள்ளை நடத்தியோ, ஊழல் கட்சிகளில் இருந்து அதிகாரப் பதவிகளை அடைந்து கருப்புப் பணத்தைப் பெருக்கியோ இந்த ‘மேன்மை மிகுந்த’ சமூகத்தில் ‘பெரிய மனிதனாக’ மாறாமற் போனது இரண்டாவது குற்றம். ஆற்று நீரின் போக்குக்கேற்பத் தெப்பம் மிதப்பதைப் போன்று, பாமர மக்களின் பேராதரவு பெற்ற பெரிய கட்சிகளில் சேர்ந்து என் எழுத்தையும், பேச்சையும் நல்ல விலைக்கு விற்காமல் நடுத்தெரு சாமானியனாக அரசியல் களத்தில் இயங்கிக்கொண்டிருப்பது மூன்றாவது குற்றம். தமிழகம் சகல தளங்களிலும் முற்றாகப் புறந்தள்ளிவிட்ட காந்தியப் பண்புநலன்களை மீட்டெடுப்பத்றகாக நான் ஓர் இயக்கம் நடத்துவது நான்காவது குற்றம். சினிமா சம்பந்தப்பட்ட அரிதாரக் கவர்ச்சி என்னிடம் அறவே இல்லாமற்போனது மிகமோசமான ஐந்தாவது குற்றம். பூரண மதுவிலக்கை உடனே கொண்டுவர வேண்டுமென்றும், ஊழலைத் தடுக்க ‘லோக் ஆயுக்தா’ சட்டத்தை உடனே நிறைவேற்றவேண்டுமென்றும் மக்கள் நலனுக்கு எதிரான கோரிக்கைகளைக் காந்திய மக்கள் இயக்கம் முதல்வரிடம் நேரில் சமர்ப்பித்தது மன்னிக்கவே முடியாத ஆறாவது பெருங்குற்றம். நடிகை சமந்தா திருப்பதி கோவிலில் தரிசனம் செய்வதுதான் மக்கள் அறிய வேண்டிய மகத்தான செய்தி என்று நினைக்கும் ஊடகங்களின் பொதுப்புத்தியைப் புரிந்து கொண்டவர்கள் ‘என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்று பயணிப்பதோடு நிறைவடைவதே நல்லது. ‘முதல்வருடன் தமிழருவி மணியன் சந்திப்பு’ என்று செய்தி வெளியிட்ட ‘தமிழ் இந்து’ நாளிதழுக்கு நன்றி. இதை ஒரு செய்தியாகப் பொருட்படுத்தாத ஊடகங்களுக்கு மிக்க நன்றி.

 

எஸ். அனந்த பத்மநாபன், பீளமேடு, கோவை.

கே: தமிழகத்தை ஆள்வது யார் மோடியா? எடப்பாடியா?

ப: ஆட்சி நாற்காலியில் அமர்ந்திருக்கும் எடப்பாடி என்றும் பொம்மையை இயக்குவது மோடியின் கையில் உள்ள காவி. ஒட்டு மொத்த அ.இ.அ.தி.மு.க.வையும் அலைக்கழிப்பது மர்மமான முறையில் கண்மூடிவிட்ட ஜெயலலிதாவின் ஆவி.

 

எம். சையது சகாபுதீன், வேலூர் – 2.

கே: மோடியின் மூன்றாண்டுகால ஆட்சிக்கு எவ்வளவு மதிப்பெண்கள் வழங்கலாம்!

ப: இட்லர், முசோலினியைப் போன்று கவர்ச்சிகரமாகப் பேசி மக்களை ஏமாற்றும் ஆற்றலுக்கு 25 மதிப்பெண்கள் வழங்கலாம். ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் பத்தாண்டு கால ஆட்சியில் நடந்தேறிய மிக மோசமான ஊழல்களைப் போன்று இன்றுவரை ஓர் ஊழலும் வெளிப்படாத ஆட்சி நிர்வாகத்திற்கு 25 மதிப்பெண்கள் வழங்கலாம். இந்துத்துவ சித்தாந்தத்தைப் பச்சையாகவும் பகிரங்கமாகவும் நடைமுறைப்படுத்துவதற்கு 50 மதிப்பெண்களைக் குறைத்துவிடலாம்.

 

மாலதி, அரும்பாக்கம், சென்னை.

கே: வாழ்க்கைக்குப் பயன்படுகிறாற்போல் ஒரு ஜென் கதை சொல்ல முடியுமா…?

ப: மிகவும் புகழ் பெற்ற ஒரு ஜென்னிடம் ஓர் இளைஞ் வந்து நின்றான். ‘நான் உங்களைப்போல் ஒரு ஞானியாக ஆசைப்படுகிறேன். எனக்கு நீங்கள்தான் ஞானம் வழங்க வேண்டும்’ என்றான். ஜென் அவன் சொன்னதைக் கேளாதவர்போல் கண்மூடி அமர்ந்திருந்தார். வந்த இளைஞன், ‘நான் ஞானியாக நீங்கள் உதவ்வேண்டும்’ என்று திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே இருந்தான். அமர்ந்திருந்த ஜென் எதுவும் சொல்லாமல் எழுந்து சென்றார். ஐந்து நிமிடங்கள் கழிந்ததும் மீண்டும் வந்து அமர்ந்தார். ‘நான் ஞானியாகத் தயவு செய்து உதவுங்கள்’ என்று உருக்கமாக அந்த இளைஞன் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்தான். அவனைத் திரும்பிப் பார்த்த ஜென், ‘சிறுநீர் கழிப்பதற்காகத் தான் சற்று முன்பு நான் சென்று திரும்பினேன். எனக்குச் சிறுநீர் வந்தால் நான்தான் போக வேண்டும்’ என்றார். அதைக் கேட்ட அந்த இளைஞன் அப்போதே ஒரு ஜென் ஆகிவிட்டான். இந்த ஜென் கதை உங்களுக்கு வேண்டிய மிக முக்கியமான வாழ்க்கைச் செய்தியை வழங்குகிறது. ஞானம் என்பது அடுத்தவரிடமிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள் இல்லை. அது தன்னுள் தானே அனுபவித்து அடைவது. எனக்குச் சிறுநீர் வந்தால் நான்தான் போக வேண்டும். என் வாழ்க்கைக்கான உயர்வை நானே முயன்று அடைய வேண்டும். இதையே பகவத் கீதை ‘உத்தரே நாத்மனாத்மானம்’ (தன்னைக் கொண்டே தான் உயர வேண்டும்) என்கிறது. வள்ளுவர், ‘ஊழையும் உப்பக்கம் காண்பர்; கலைவின்றித் தாழாது உலுற்றுபவர்’ என்கிறார்.

 

ஆர். இராமலிங்கம், அரியலூர்.

கே: இறப்பு நிச்சயம் என்று தெரிந்த பின்பும் ஏன் மனிதன் பொருள் சேர்க்க அலைகிறான்?

ப: ஊருக்கெல்லாம் வரும் இறப்பு ஒரு நாளும் தனக்கு உடனே வரப்போவதில்லை என்ற பொய்யான நம்பிக்கை ஒரு காரணம். இறக்கப் போவது நிச்சயம் என்பதால், இருக்கும் போதே அனைத்து உலக சுகங்களையும் அனுபவிக்கப் பொருள் அவசியம் என்ற ஆசையின் அலைக்கழிப்பு மறுகாரணம்.

 

ஜெ. முத்துசாமி, கோபி.

கே: எல்லாமே மாயை என்றால் எது நிஜம்?

ப: எல்லாமே மாயை என்பதுதான் நிஜம்.

 

இரா. மந்திரமூர்த்தி, பேட்டை, நெல்லை.

கே: காந்தியமும் மார்க்சியமும் தோற்றுப்போய் விட்டனவா?

ப: வன்முறை வளர்த்தெடுக்கப்படும்வரை காந்தியம் கண்மூடாது. ஏழ்மை இருக்கும்வரை மார்க்சியத்திற்கு மரணம் கிடையாது.

 

பெரியாண்டவர் செல்வம், சென்னை – 41.

கே: தலித்துகளின் விரோதியாக ஏன் காந்தி சித்தரிக்கப்படுகிறார்? தலித் விடுதலைக்குக் காந்தியத்தின் பங்கு என்ன?

ப:  தலித் அரசியல் நடத்தும் தலைவர்கள் காந்தியைத் தவறான கண்கொண்டு பார்ப்பதே காரணம். அண்ணல் அம்பேத்கார் அரசியலமைப்புச் சட்டத்தில் தலித்துகளுக்கு இடொதுக்கீடு கிடைத்தது. அந்த அம்பேத்கரை நேருவிடம் சட்ட அமைச்சராக நியமிக்கும்படி அறிவுறுத்தியவர் காந்தி.

Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *