ரஜினி சிலுவை சுமப்பாரா?

அணிந்துரை

‘சத்யம் வத; தர்மம் சர’ என்கிறது வேதம். ‘உண்மையைப் பேசு; அறத்தைப் பின்பற்று’ என்பதே அதன் பொருள்.

உண்மை என்பது இறைவனுக்கு இணையானது. இறைவன் என்றும் இருப்பவன்; அழிவற்றவன். உண்மை என்பதும் நிறம் மாறாதது; நிலையானது.

நன்மைக்கும் தீமைக்கும் நடுவில் எல்லையை வரையறுத்து, நன்மையை நாடவும் தீமையைத் தவிர்க்கவும் நம்மை நெறிப்படுத்துவதே அறம் எனப்படும்.

உண்மையை உரைப்பதும், அறத்தைப் பின்பற்றுவதும் மானுட தர்மம் மட்டுமன்று; அதுவே முக்கியமான ஊடக தர்மமும் கூட!

‘சகல திசைகளிலிருந்தும் சிறந்த செய்திகளே நம்மை வந்து சேரட்டும்’ என்கிறது ரிக்வேதம். ஆனால், சமுதாயத்தை நெறிப்படுத்தும் நல்ல செய்திகளைச் சேர்ப்பதில்லை என்று சத்தியம் செய்ததுபோல் நடந்துகொள்கின்றன நம்மைச் சுற்றியிருக்கும் ஊடகங்கள்.

இங்குள்ள ஊடகங்களின் உரிமையாளர்களுக்கு வெற்றிகரமாகப் பொருளீட்டுவதைத் தவிர வேறெந்த மேலான சமூக நோக்கமும் இல்லை.

மக்களை நல்வழிப்படுத்தும் நெறியாளர்களாகவோ, தனி மனிதனை மிகச் சிறந்த சமூக மனிதனாக்கும் நோக்கம் உள்ளவர்களாகவோ இன்று ஊடகத்துறையில் பலரைப் பார்க்க முடியவில்லை.

‘பொய்ம்மை, இரட்டுறமொழிதல், நடிப்பு, வஞ்சனை இவற்றால் பொருளீட்டிப் பிழைத்தல் நாய்ப்பிழைப்பெனக் கொள்வேன்’ என்றான் பாரதி. இன்று ஊடகங்களில் உள்ளவர்களில் பலர் ‘நாய்ப் பிழைப்பு’ நடத்துபவர்களாக இருப்பது வருத்தத்திற்குரியது.

வாழ்க்கையில் எல்லா விதிகளுக்கும் விலக்கு உண்டு. தமிழ்த் தொலைக்காட்சிகளில் ‘மக்கள் தொலைக்காட்சி’ விதிவிலக்காக இருப்பது போன்று சமூகப் பொறுப்புணர்வு மிக்க ஊடகவியலாளர் சிலர் விதிவிலக்காக இயங்குவது உண்மை.

இயேசுவைச் சிலுவையில் அறைந்துவிட்டு, அவரது மேலங்கியைப் பங்குபோடத் துணிந்த மனிதர்களைப் போல, உண்மைகளைச் சிலுவைகளில் அறைந்துவிட்டு, அறத்துக்குப் புறம்பான வாழ்க்கைச் சுகங்களைப் பங்குபோட்டுக்கொள்ளும் மனிதர்கள் ஊடகத் துறையில் பல்கிப் பெருகிவிட்டனர்.

ரஜினிகாந்த் அரசியலில் அடியெடுத்து வைப்பார் என்ற செய்தி இன்று ஊடகங்களின் பெரும்பசிக்கு உணவாகிவிட்டது. அரசியலில் அவர் அடியெடுத்து வைக்கக் ஊகடும் என்ற ஆரூடம் நிலவும் நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளில் அதிர்வலைகள் உருவாகியிருப்பதை நம்மால் உணர முடிகிறது. ஒவ்வொரு கட்சியும் ரஜினிகாந்தின் செல்வாக்கைப் பயன்படுத்திக் கொள்வதற்கு தயாராக உள்ள நிலையில், அவர் தனிக்கட்சி தொடங்கக் கூடும் என்ற செய்தி அக்கட்சிகளுக்கு அச்சத்தை உருவாக்கியுள்ளது. பல்லக்கு சுமப்பவராக ரஜினிகாந்த் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் எந்த அரசியல் கட்சியும் அவரைப் பல்லக்கில் அமர்த்தி அழகு பார்க்கத் தயாராக இல்லை.

ரஜினியின் அரசியல் வருகையால் தங்கள் வாக்கு வங்கி பெரிதாகப் பாதிக்கப்படும் என்று ஒவ்வொரு கட்சியும் அஞ்சுவதால்தான் மறைமுகமாக அவருக்கு எதிராகக் ஊடகங்களில் குரல் எழுப்பிக் கொண்டிருக்கின்றன. முடிந்துவிட்ட ஜெயலலிதாவும், முடங்கிவிட்ட கலைஞரும் இல்லாத தமிழக அரசியலில் இன்று ஏற்பட்டிருக்கும் வெற்றிடத்தை ரஜினியால் இட்டு நிரப்ப முடியுமா? என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வியாக எங்கும் எதிரொலிக்கிறது. ஊழல் கறை படியாத புத்தம் புதிய மனிதராக அரசியல் உலகில் ரஜினி அடியெடுத்து வைக்கும் நிலையில் பெரும்பான்மை வாக்குகளை நிச்சயம் அவர் பெறக்கூடும். தனிக்கட்சி தொடங்கினால் ஒருகால், திராவிடக் கட்சிகளின் நிழலில் அவர் நின்றால், அழுகிவிட்ட அரசியல்களம் குறித்து அவர் பேசியதில் பொருள் இல்லாமல் போகிவிடும். சாதிய, வகுப்புவாத சக்திகளுடன் அவர் கை கோர்த்துக்கொண்டால், நாம் எதிர்பார்க்கும் மாற்று அரசியல் அவர் மூலம் இந்த மண்ணில் நிச்சயம் மலராது. பணம் சேர்க்க நினைப்பவர்கள் என் பக்கத்தில் வரக்கூடாது என்று தெளிவாகச் சொன்னதின் மூலம் தமிழகம் தாகத்துடன் எதிர்பார்க்கும் ஊழலற்ற நிர்வாகத்தை அவர் வழங்கக் கூடும் என்ற நம்பிக்கை எழுகிறது. ஆனால், அவரது பிரிவாரத்தின் மீது அதே நம்பிக்கையை நாம் கொள்ளக்கூடுமா? என்ற சந்தேகமும் அலைக்கழிக்கிறது. திரும்பும் திசையெங்கும் யூதாஸ்கள் நிறைந்திருக்கும் அரசியல் உலகம், ரஜினியை சிலுவையில் அறையாமல் விட்டு வைக்குமா? சிலுவை சுமப்பதற்கு உண்மையிலேயே ரஜினி தயாராக இருக்கிறாரா? இந்த இரண்டு கேள்விகளுக்கும் காலம்தான் விடைகொடுக்க வேண்டும்.

ஒரு சமூகத்தை நெறிப்படுத்தும் பொறுப்பு எந்த நாட்டிலும் ஊடகங்களுக்குத்தான் உண்டு. அதனால்தான், அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்குவதில் பெரும் பங்களிப்பை வழங்கிய ஜெபர்சன், ‘செய்தித்தாள் இல்லாத அரசாங்கம் தேவையா, அல்லது அரசாங்கம் இல்லாத செய்தித்தாள் தேவையா என்று என்னை முடிவெடுக்கச் சொன்னால், நான் இரண்டாவதைத் தேர்ந்தெடுக்க ஒரு கணமும் தயங்கமாட்டேன்’ என்றார்.

ஜெபர்சனின் வாக்குமூலம் செய்தித்தாளின் வலிமையையும் பொறுப்பையும் நமக்குச் சரியாக உணர்த்திவிடுகிறது. இதை முழுமையாக உணர்ந்துகொண்டவர்கள் எத்தனை பேர் இன்று ஊடகத்துறையில் உள்ளனர்?

ஜெபர்சன் காலத்தில் காட்சி ஊடகம் இல்லை. இன்று அச்சு ஊடகத்தையே விழுங்கிவிடும் வகையில் காட்சி ஊடகம் ஆயிரம் கைகள் கொண்ட பாணாசூரனைப்போல் விஸ்வரூபம் கொண்டுவிட்டது.

எத்தனை தொலைக்காட்சி ஊடகங்கள் புதிதாய் உருவெடுத்தாலும் ‘விக்ஸ் ஃபார்முலா’ போன்று அவையனைத்தும் ஒரே ஃபார்முலாவைத்தான் பயன்படுத்துகின்றன.

இங்கு ஊடகங்கள் அனைத்தும் இருதுறைகளில் இருப்பவர்களை நம்பித்தான் உயிர் வாழ்கின்றன. இதில் ‘இந்து’ ஆங்கில நாளிதழ் உட்பட எதுவுமே விதிவிலக்கு இல்லை.

தட்டையான இரசனையை வளர்த்தெடுக்கும் திரையுலக நட்சத்திரங்களும், பொதுவாழ்வின் புனிதத் தன்மையைப் பாழ்படுத்திவிட்ட அழுக்கேறிய அரசியல்வாதிகளும்தான் இந்த ஊடகங்கள் பிழைத்திருப்பதற்குப் பிராணவாயு வழங்குபவர்கள்.

வன்முறையற்ற அரசியலமைப்பு, சுரண்டலற்ற சமத்துவ சர்வோதய சமுதாய அமைப்பு, உண்மையையும் அன்பையும் வழிபடும் வாழ்வியல் முறை. கட்டாய உடலுழைப்பில் உணவு தேடும் சுயமரியாதை, எளிய வாழ்வில் இன்பம் காணும் மனம், சமய சகிப்புத் தன்மை ஆகியவற்றை வளர்த்தெடுக்கும் நோக்கில் எத்தனை ஊடகங்கள் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றன?

சுதந்திரமான சமூக அமைப்பில் முக்கியமான சிவில் உரிமை, பேச்சுரிமை, செயலுரிமை ஆகி மூன்றுக்கும் பங்கம் விளைவிக்கக்கூடிய சுயநலசக்திகளின் முகமூடிகளை விலக்கி, நிஜமுகங்களை நிதர்சனமாகத் தோலுரித்துக்காட்டும் அறச்சீற்றம் எத்தனை ஊடகங்களுக்கு உண்டு?

ஊடகங்களுக்கான சுதந்திரம் என்பது உண்மையைப் பொய்யின் சரிகைப் பூச்சு இல்லாமல் சமூக மக்களிடம் வெறிப்படுத்துவது என்ற உள்ளார்ந்த புரிதலுடன் செயற்படும் அச்சு ஊடகங்கள் எத்தனை? காட்சி ஊடகங்கள் எத்தனை?

பாமர மக்களின் தவறான அபிப்ராயங்களை ஒழிப்பதும், அறிவைத் தூய்மை செய்வதும், வெகுமக்களின் அறியாமையின் ஆழத்தைப் புலப்படுத்துவதும்தான் ஊடக அறம்.

‘இரத்த சமுத்திரமே திரண்டு வந்தாலும், சத்தியத்தை மட்டும் மூழ்கடிக்க முடியாது’ என்ற தார்மிக ஆவேசத்துடன் இயங்குவதுதான் ஊடகத்துறையினருக்கான அடிப்படை இலக்கணம்.

நம் ஊடகங்களில் பல அன்றாடம் பொய்யைப் பரப்புகின்றன; வாழ்க்கை விழுமியங்களுக்கு எதிரான செய்திகளை விதைக்கின்றன; பண்பாட்டுக்குப் புறம்பான நிகழ்ச்சிகளோடு ஒவ்வொரு வீட்டையும் நோக்கிப் படையெடுக்கின்றன.

சாய்வுத் தன்மை இல்லாமல் செய்திகளையும், விவாதங்களையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஊடகங்களை நம்மால் காணமுடியவில்லை.

சமூகத்தின் சகல தளங்களின் விதியெழுதும் அரசியல் உலகம் ஊடகங்களையும் விட்டு வைக்கவில்லை. ஆளும் கட்சி அள்ளி வழங்கும் விளம்பர வருவாய்க்காக விலைபோகும் ஊடகங்கள் ஒரு பக்கமும், கொள்ளையடித்துக் குவித்து வைத்திருக்கும் வலிமையான எதிர்க்கட்சி வீசியெறியும் கள்ளப்பணத்திற்கு வாய் திறக்கும் ஊடகங்கள் மறுபக்கமும் சாய்வுத் தன்மையுடன் செயற்படுவதால் அவற்றின் நம்பகத்தன்மை பறிபோய்விடுகிறது.

‘விவேகம் உள்ளவர்கள் அதிகார நாற்காலியில் அமரவேண்டும்; அல்லது அதில் அமர்ந்தபின்பாவது விவேகம் உள்ளவர்களாக மாறவேண்டும்’ என்றார் பிளேட்டோ. தமிழகத்தில் கடந்த ஐம்பதாண்டுகளாக அப்படியோர் ஆரோக்கியமான சூழல் கனியவே இல்லை.அ தற்கு நம் ஊடகங்களும் உதவியாக இல்லை.

இலட்சிய வேட்கையும் சுதந்திர சிந்தனையும் சமுதாயப் பார்வையும் இன்றைய தலைமுறையிடம் வந்து சேர்வதற்கு இனியாவது ஊடகங்கள் ஆக்கபூர்வமாகச் செயற்பட வேண்டும்.

‘கழீஇய காதலர் ஆயினும் சான்றோர்

பழியொடு வரூஉம் இன்பம் வெக்கார்’ (அகநானூறு)

என்பதுதான் தமிழினத்தின் அறக்கோட்பாடு.

அறக் கலப்பு இல்லாத இன்பம் இன்பமே இல்லை. அறம் வழுவிய வாழ்க்கை வாழத் தகுதியானது அன்று.

அதிகார வர்க்கத்தைச் சட்டமியற்றும் அமைப்பு கண்காணிக்கிறது. இந்த இரண்டையும் நீதித்துறை கண்காணிக்கிறது. நீதித்துறையோடு சேர்ந்து மூன்றையும் கண்காணிக்கும் பொறுப்பு ஊடகங்களுக்கு மட்டுமே உண்டு.

‘ஊடகம் – அறமும் அரசியலும்’ என்ற தலைப்பில் பா. பைந்தமிழ் வடித்திருக்கும் நூல் இன்றைய ஊடகங்களின் இழிந்த நிலையை ஆதாரங்களுடன் அற்புதமாக விவரிக்கிறது. அறம் வழுவாத ஊடகங்களின் தேவை குறித்துப் பெரிதாகச் சிந்திக்கும் ஐயா மருத்துவர் இராமதாசு அவர்கள் மேற்கொண்ட முயற்சியின் விளைவாக இந்த நூல் உங்கள் கரங்களை அலங்கரிக்கின்றது.

‘செவிட்டு அரசும் ஊமைச் சனங்களும் ஜனநாயகத்தின் எதிரிகள்’ என்றார் மூதறிஞர் இராஜாஜி. அறம் வழவி நம்மை அரவணைக்க அன்றாடம் வரும் ஊடகங்களையும் ஜனநாயகத்தின் எதிரிகள் பட்டியலில் தயக்கமின்றி நாம் இணைத்துக் கொள்ளலாம்.

 

அன்புடன்,

தமிழருவி மணியன்.

Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *