வாயு பிரச்சினைகள் வராதிருக்க…

வாய்வு பிரச்சினையை எதிர்கொள்ளாத வாழ்க்கையை யார் ஒருவரும் வாழ்ந்திருக்கவே முடியாது. இது சகலருக்கும் ஏற்படும் சகஜமான பிரச்சினை தான்! ஆனால் இது அலட்சியப்படுத்தக்கூடிய ஒன்றல்ல. வாய்வு பிரச்சினையை வளரவிட்டால் அது நம்மை வாட்டிவதக்கிவிடும். ஐந்துவித வாயுக்களின் சஞ்சாரத்தால் நம் உடல் இயங்கிக் கொண்டுள்ளது. நாம் நாசியின் மூலம் இழுத்து நுரையீரலுக்கு அனுப்பும் காற்று பிராணவாயுவாகும். இதற்கு ஆக்சிஜனே அடிப்படை! மலத்துவாரத்தின் வழி வெளியேறும் காற்று அபானவாயு எனப்படும். இது கார்பண்டை ஆக்சைடு, ஹைட்ரஜன் மற்றும் மீத்தேன் கலந்த கலவையாகும். நம் உடலின் ரத்த ஓட்டத்திற்கு ஆதாரமான வாயு வியானவாயுவாகும். ஜீரணத்திற்கு ஆதாரமானது சமானவாயுவாகும். கண்ணீர், வாந்தி ஆகியவற்றிக்கு ஆதாரமானது உதானவாயுவாகும். வாயு வெளியேற்றத்தை எவர் ஒருவராலும் தடுக்க முடியாது, தடுக்கவும் கூடாது.

மலத்துவாரத்தின் வழியான ‘குசு’வை கட்டுப்படுத்துவது நம் உடலுக்கு பெரும் கேட்டை ஏற்படுத்தும் என்கிறது ஆயுர்வேதம்.

சாப்பிட்ட பிறகு வெளிப்படும் ஏப்பமும் அவசியமானது. அர்த்தமுள்ளது. ஏப்பமும் வந்தவுடன் சாப்பிடுவதை நிறுத்திக்கொண்டு திருப்தியுடன் எழுந்தால் விவேகமாகும்.

ஏப்பம் கூட வெளிவர இயலாத வகையில் அதிகமாக உண்பது விபரீதத்தில் கொண்டுவிடும். சாப்பிட்டவுடன் வரும் ஏப்பம் ஆரோக்கியமானது. சாப்பிட்டு சில மணிநேரம் கழித்து ஏப்பம் வெளியேறினால் அது நமது தவறான உணவுபழக்கத்தின் வெளிப்பாடாகும்.

பொதுவாக சாப்பிடும் போது வாயை மூடிக்கொண்டு மெல்வதன் மூலம் நாம் அநாவசியமாக வாய்வழியே குடலுக்குச் செல்லும் காற்றை தவிர்க்க முடியும்.

அதேபோல் தண்ணீரை டம்பளரில் வாய்வைத்து குடிப்பதுதான் சரியானது. அண்ணாந்து குடிப்பதால் அநாவசியமாக காற்றையும் சேர்த்தே விழுங்குகிறோம்.

வாய்வு பிரச்சினை நம்மை பற்பல உபாதைகளில் கொண்டுவிடும். வயிற்று இரைச்சல், வயிற்று உப்புசம், புளித்த ஏப்பம், குமட்டல், வாந்தி, மயக்கம், தசைகளில் ஏற்படும் சுளுக்கு, மூட்டுவலி… என பல நோய்களுக்கு வித்திடும்.

பசி இல்லாத நிலையில் சாப்பிடுவது வாத நோய்க்கு வித்திடும். அதிகமான ஆகாரம் உட்கொள்வது உடலுக்குள் காற்றின் இடத்தை கபளிகரம் செய்வதாகும். அரைவயிறு ஆகாரம் கால்வயிறு தண்ணீர், கால்வயிறு காற்று என்ற கணக்கை மீறக்கூடாது. நல்லபசி நேரத்தில் முறையான ஆகாரம் உட்கொள்ளாமல் காபி, தேநீர், குளிர்பானம், நோறுக்குத் தீனி என திசைமாறி வயிற்றுக்கு துரோகம் இழைப்பது வாய்வு பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

மலக்கழிவுகளை தினசரி இருமுறை வெளியேற்றாவிட்டால் அதுவும் வாய்வு கோளாறுகளுக்கு வழிவகுக்கும்.

தவறான உணவு பழக்கங்களே வாய்வு கோளாறுகளுக்கு பிரதானகாரணம் என்பதே உணவு நிபுணர்களின் உறுதியான நிலைப்பாடாகும்.

எண்ணெய் பலகாரங்கள், கிழங்குவகைகள், பருப்பு மற்றும் பயிறு வகைகள், பால் மற்றும் பாலின் தயாரான இனிப்புவகைகள், மாமிச உணவுகள், மசாலா உணவுகள், பீன்ஸ், பட்டாணி, முட்டைகோஸ் போன்ற காய்கறிகள், பச்சரிசி, சோளம் மற்றும் பேக்கரி அயிட்டங்கள் உடலில் வாயுவை அதிகப்படுத்தும் உணவுகள். இவற்றை மிக அளவாக, எச்சரிக்கையாக எடுத்துக்கொண்டால் வாய்வு தொந்தரவுகளை தொலைவிலேயே நிறுத்தி வைக்க முடியும்.

சில பேர் சோடா குடித்தால் வாய்வு பிரச்சினை விலகும் என நினைத்து குடிப்பதுண்டு. அது வாய்வு பிரச்சினையை அதிகரிக்கவே செய்யும். எல்லா பாட்டில் பானங்களும் வாய்வு பிரச்சினையை அதிகப்படுத்தும். இன்னும் சிலபேர் ஜெலுசில், டைஜின், ஆண்டாசிட் போன்ற மாத்திரைகள் சாப்பிட்டு மீளமுடியுமா என முயற்சிக்கின்றனர். இதில் பலன் இல்லை என்பதோடு பாதகங்களே அதிகமாகும். ரத்த அழுத்தம், நீரிழிவு, வலிநிவாரணம், பேதி போன்ற நோய்களுக்கு உட்கொள்ளும் மருந்து மாத்திரைகளும், ஆண்டிபயாடிக் மாத்திரை மருந்துகளும் உடலில் வாயுகோளாறுகளுக்கு வித்திடுவது ஆய்வுகளின் வழியாக அறியவந்துள்ளது.

வாய்வு பிரச்சினை உள்ளவர்கள் பச்சரிசியை தவிர்த்து புழுங்கல் அரிசியை உட்கொள்ள வேண்டும். ஊறுகாயை தவிர்த்து புதினா, கொத்தமல்லி, பிரண்டை போன்றவற்றில் துவையல் செய்து சாப்பாட்டில் சேர்க்கலாம். புளித்துபோன மாவு, பழைய குழம்பு, பிரியாணி போன்றவை உடலில் வாயுவை கூட்டும் உணவுகளாகும்.

மது, பீர், புகையிலை, பான்மசாலா, குட்கா போன்றவை வாயுதொல்லையுள்ளவர்களை நிச்சயம் பதம்பார்த்துவிடும். படுத்துக்கொண்டே சாப்பிடுவது, நின்றுகொண்டே சாப்பிடுவது உடலில் வாயுபிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். குழந்தைக்கு பால் ஊட்டும்போது கூட இடையிடையே தோளில் தூக்கி வைத்து, முதுகில் லேசாகத் தட்டிவிட்டு பிறகு மறுமார்பகத்திற்கு மாற்றி பால் ஊட்டுவது குழந்தைக்கு வாயுத்தொல்லை வராமலிருக்கத்தான்! குழந்தை பால் குடித்து முடித்தவுடன் அதை தோளில் சாய்த்துவைத்தவாறே அங்குமிங்குமாக சிறுநடை நடப்பதும் வழக்கமாகும்.

நாம் எப்போதுமே சாப்பிட்டு முடித்தவுடன் ‘அக்கடா’ என்று உட்கார்ந்து விடுவதோ, படுப்பதோ உடலில் வாய்வு தொல்லைகள் உருவாகக் காரணமாகிவிடும். எனவே சாப்பிட்டவுடன் லேசான பொடிநடை போடுவதும், அச்சமயம் ஏப்பம் வெளியேறுவதும் மிகவும் ஆரோக்கியமான அணுகுமுறையாகும்.

உடல் உழைப்பு அறவே இல்லாதவர்களும், சோம்பேறிகளும், உட்கார்ந்தே வேலை செய்பவர்களுக்கும் வாய்வுத்தொல்லை வேண்டாத விருந்தாளியாக வந்தே தீரும், உடற்பயிற்சி, உடல் உழைப்பு போன்றவை நம் உடலில் வாயு சரியாக சஞ்சாரம் செய்வதற்கான சாதக சூழலை உருவாக்கித் தரும்!

வாய்வு பிரச்சினையிலிருந்து விடுபட சில உணவு பழக்கங்களை சிரத்தையுடன் மேற்கொண்டால் சுகமாகலாம். சுக்குமல்லி காபி வாயுவை வலிந்து வெளியேற்றும் வல்லமை கொண்டதாகும். பூண்டு உட்கொள்வது வாய்விலிருந்து பூரண குணமடைய உதவும், பாலில் பூண்டுபோட்டு அருந்துவது, பூண்டு ரசம், பூண்டு குழம்பு, பூண்டு துவையல்… என பலவகைகளில் பூண்டை சேர்க்கலாம். இதே போல் இஞ்சிப்பால், இஞ்சி துவையல், இஞ்சி குழம்பு என இஞ்சிப் பயன்பாட்டை உணவில் கொண்டுவரலாம்.

புதினா, லவங்கபட்டை, பெருங்காயம், ஏலக்காய், முடக்த்தான் கீரை, தூதுவளை கீரை, வல்லாரைக் கீரை போன்றவையும் வாயுவை கட்டுப்படுத்தும் உணவுகளாகும்.

பிராணாயாமம், யோகா, உடற்பயிற்சிகள் வாய்வு ஆதிக்கத்தை கட்டுப்பாட்டில் வைக்க உதவும்.

பதற்றம், மனக்குழப்பம், உறக்கமின்மை, கோபம் போன்றவை வாயுதொந்தரவுகளை மேலும் அதிகப்படுத்திவிடும். இப்படியான குணமுள்ளவர்கள் தங்கள் குற்றங்களிலிருந்து மீண்டு வர தியானம் ஒன்றே கைகொடுக்கும்.

வாயு என்பது மிகவும் சூட்சுமமானது. காற்றை கையாளத்தெரிந்தால் மரணத்தின் தேதியை மாற்றியமைத்து, கூற்றனைக் கூட கும்பிட வைக்கலாம். வாயுவை பகவானாக வழிபடச் சொன்னதன் மூலம் அதன் முக்கியத்துவத்தை நம் முன்னோர் நமக்கு உணர்த்தி வைத்தனர்.

Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *