சுய வதம்

இவனை எப்படிக் கோபித்துக்கொள்வது.

கொஞ்சம் சூடான ஒரு சொல் இவன் முகத்தில் எத்தனை உணர்ச்சிக் கோடுகளை இழுத்துவிடுகிறது!

ஒரு ஐந்து வயதுப் பையனால் நாற்பத்தெட்டு வயதுக்காரரின் கோபதாபங்கள் தாங்கக் கூடியவைதானா?

‘’ ரொம்பத்தான் செல்லங் கொடுக்கிறைய’’ என்று சொர்ணவேலுவின் மனைவி அடிக்கடி குறைப்பட்டுக் கொள்வாள். அவரைக் கண்டித்து ஆனந்தப்படத் துடிக்கும் அவளது அந்தரங்க ஆசைக்கு அது வாய்ப்பாக பல நேரங்களில் இருக்கும்.

‘’பாவம, அவன் சின்னப் பய. அவன்ட்ட என்ன பெரிசா…’’

‘’என்ன சின்னப் பய? அஞ்சு வயசாகலையா?’’

‘’அடேயப்பா, எவ்ளோ பெரிய வயது… அஞ்சு வயது…’’

‘’பெரிசா ஒன்னும் நக்கல் பண்ண வேணாம்… அஞ்சு வயசுல வர்ரதுதான் அம்பது வயசுலயும் வரும்.’’

‘’அப்படீங்களா மாடம். இப்ப ஒங்க வயசென்ன? நாப்தா? நாப்பத்தொன்னா? அப்படீன்னா நாலு வயசுல இருந்தாப்லதான் இப்பவும் இருக்கீங்க இல்லே?’’

அவள் சிரித்து விட்டாள். ஆயினும் அடுத்த நிமிஷத்திலேயே முகத்தில் ஆவி அடித்தது.

‘இப்படியே செல்லங் கொடுத்து செல்லங் கொடுத்து அவனெக் குட்டிச்சுவராக்குறே.’’

‘’சரி போதும். எனக்கென்ன? ஒங்க பாடு, ஒங்க புள்ளே பாடு’’

‘’அவ்வளவுதானே. அப்பறும் ஏன் பினாத்திக்கிட்டே இருக்கே?’’

அவள் மௌனமாவாள். ஆனால் வேறோர் இடத்தில் அது உடைந்து நொறுங்கும்.

‘’போய்த் தொலை அந்தப்பக்கம். சனியம் புடுச்ச மூதேவி. ஒண்ணாலதான் நான் திட்டு வாங்கிக் கட்டிக்கிறேன்’’ என்று சிறுவன் பாஸ்கரிடம் பல்லைக் கடிப்பாள்.

இரண்டு நாட்கள் சிறுவன் எது செய்தாலும் அவள் கண்டு கொள்ள மாட்டாள். அதற்கு மேல் அவளால் தாக்குப் பிடிக்க முடியாது.

‘’நமக்கென்னன்னு இருக்க முடியல. மனசு கேக்க மாட்டேங்குது. அவனுக்கு ஒன்னுன்னா கடேசில்ல அவதிப்பட்றது நாந்தானே’’ என்று பீடிகையுடன் ஆரம்பித்தால் அதன் பிறகு பாஸ்கரைப் பற்றிய புகார்ப் பட்டியல் வரும்.

‘புத்தகத்தெத் தொட்றதுனா இவனுக்கு வேப்பங்காயா இருக்கு. கிரவுண்டுல என்னதான் இருக்குமோ? நாள் முச்சூடும் அங்கெதான் கெடையாக் கெடக்குறான்… எதிர்த்த வீட்ல பூச்சு வேலெ நடக்குது. மணலெக் கொண்டாந்து கொட்டீருக்காங்க. அந்த ஈர மணல்ல ஏர்றதும் இறங்குறதும் புரள்றதுமா இருக்கான். ஒடம்புக்கு ஏதாச்சும் வர்றது ஒரு பக்கம் இருக்கட்டும். அத வீட்டுக்காரி அவ பாட்டன் பூட்டன் சொத்தெயெல்லாம் அபகரிச்சிட்டுப்போறது மாதிரி அப்படிப்பாத்தாளே. அவ ரெண்டு வார்த்தெ சொன்னான்னு வச்சுக்குங்க. நா பதிலுக்கு ரெண்டு வார்த்தே சொல்லணும். வீண் வம்புதானே?… கெணத்தடியில் போய் நின்டுகிட்டே இருக்கான். சோப்பெக் கரெச்சு கொட்டாங் கச்சியில வச்சுக்கிட்டு ஊதிக்கிட்டிருக்கான். பபுல்ஸ் விட்றானாம் இப்படி ஈரத்தில நின்டா உடம்பு என்ன ஆகும்? அப்புறம்…’’ என்று அவள் மேலே தொடரத்துவங்கும் போது, சொர்ணவேலு வலது கையை உயர்த்தி விஸ்வாமித்ர அபிநயம் செய்வார்.

அதன்பிறகு, பாஸ்கர் அழைக்கப்படுவான். அவளின் திருப்திக்காக சிரத்தை இல்லாமல் விசாரிப்பு என்ற பெயரில் சில கேள்விகள் கேட்பார்.

‘’என்னங்க சார்…. அம்மா என்னென்னமோ சொல்லறாங்க. எல்லாம் வாஸ்தவம்தானா சார்?…’’ என்று அவர் ஆரம்பிக்கும் போதே அவர் மனைவி குறுக்கிடுவாள்.

‘’ஆமா, அவனெ சாரு மோருன்னுங்க. அப்புறம் ஒங்களையும் மதிச்சிருவான். என்னையும் மதிச்சிருவான்.’’

‘’அது எங்களுக்குத் தெரியும். நீங்க வாய மூடுங்க… என்ன பாஸ்கர், வாஸ்தவம்தானா?’’

‘’இல்லேப்பா, அம்மா பொய் சொல்றாங்க.’’

அவள் உடல் பதறக் கத்துவாள்.

‘’நா பொய் சொல்றேன். இவன் பெரிய அரிச்சந்திரனோட பேரன்ல. உண்மையத்தவிர வேறெதையும் பேச மாட்டான். அறெஞ்சன்னா எப்படி இருக்கும் தெரியுமா?’’

அதன் பிறகு பிரச்சனை முகம் மாறி, அதன் தொடர்பு எல்லையும் விலகிப் போகும்.

‘’இப்ப என்ன சொல்லிவிட்டான், பெரிசா பாஞ்சுக்கிட்டு வாரையே. நா இருக்கிறப்பவே இப்படிச் செய்யிறே. இல்லேன்னா எப்படி இருக்குமோ?’’

‘’ஆமா, அப்படியே கடிச்சு தின்னுடுவேன். ஏன்னா அவென் என்னோட சக்களாத்தி மகன்ல.’’

‘’அப்படி இருந்தாத்தானா? இப்படி நடந்துக்கிட்டா அதுக்கு அர்த்தம் அப்படித்தான் படும்.’’

‘’படம், படும்… ஒங்களுக்கும் படும்… ஒங்க புள்ளெக்கும் படும்.’’

திருமணமாகி எத்தனை ஆண்டுகளுக்குப் பின் பிறந்தவன் இவன்! காலம் தப்பிப் பிறந்தவன் என்பதால் இவன் மீது அபரிமிதமான அன்பும், பிரியமும் தனக்குத் தோன்றியது போல் ஏன் இவளுக்குத் தோன்றவில்லை?

‘’ஒருவேளை இவனிடம் நான் வெறுப்புக் காட்டி, கடுப்படித்தால் இவள் கொஞ்சிக் குழைவாளோ?’’ என்றும் சொர்ண வேலு நினைத்துப்பார்த்திருக்கிறார்.

 

‘’அவனோட வயசென்ன, ஒன்னோட வயசென்ன? சரிக்கு சரின்னு நிக்கிறயே’’ என்று சொல்லிப் பார்த்தும் அவளை மாற்ற முடியவில்லை.

அவளைத் திருப்திப்படுத்த வேண்டும் என்பதற்காக பாஸ்கரை எபோதாவது கொஞ்சம் மிரட்டுவது போல் பாவனை காட்டுவார்.

‘அம்மா சொல்றதெ நீ கேக்கக் கூடாதா? படவா, இன்னமே ஏதாச்சும் ரிப்போர்ட் வரட்டும். ஒதெக்கிறேனா இல்லையா பாரு’’

அதில் அடங்கியுள்ள பொய்த்தன்மையையும், நாடக பாவனையையும் அவனால் புரிந்து கொள்ள முடியாது. அவன் கண்கள் கலங்கும். மூக்கை உறுஞ்சுவான்.

சொர்ணவேலுவால் அதைத் தாங்கிக் கொள்ள முடியாது. அவன் தோளில் தட்டியபடி கைத்தாங்கலாக மாடிக்கு அழைத்துப் போய் மெல்லச் சொல்வார்.

‘’அட மண்டு! நா உண்மையாக் கோவிச்சுக் கிட்டேன்னு நெனச்சியா? சும்மா அம்மாவுக்காகப் பொய்க்காச்சும் சொன்னேன். ஒன்னெப் போயி கோவிச்சுக்கிருவாங்களாப்பா?’’ என்றதும் அவனுக்கு டானிக் சாப்பிட்டது போலிருக்கும். ‘தடதட’வென மாடிப்படிகள் அதிர அவன் இறங்கி ஓடுவான். அவன் வரும்போது இருந்த தளர்ச்சிக்கும், இதற்குமான வேறுபாட்டையும், அதன் காரணத்தையும் உணரும்போது சொர்ணவேலுவுக்கு வியப்பாக இருக்கும்.

ஆயினும் இந்த நிதானத்தையும், பொறுமையையும் சொர்ணவேலுவால் ன்று ஏனோ கடைப்பிடிக்க முடியவில்லை.

ஆஃபீசிலிருந்து வீட்டிற்குத் திரும்பி வந்து கேட்டைத் திறந்ததுமே அவர் மனைவிசொல்லி விட்டாள். சைக்கிளைக் கூடத் தூக்கிவராந்தாவில் வைக்கவில்லை. வழக்கத்திற்கு மாறாக அன்று அவர் கோபமடைந்ததற்கு அதுவும் ஒரு காரணாக இருக்கக் கூடுமோ?

‘’எத்தென மொறெ நீங்க படிச்சுப் படிச்சுச் சொல்லிட்டுப் போனெய. அப்படிச் சொல்லீட்டுப் போயும் அவன் வெயில்ல போயி வெளையான்டா, ஒங்க சொல்லெயே மீறுறான்னா நாங்கல்லாம் எம்மாத்திரம்? கைகழுவுன கூழு…’’

அவர் பாஸ்கரைக் கடுமையாகப் பார்த்தார். அந்தப் பார்வையின் வெப்பத்தில், தீ பட்ட தளிராக அவன் முகம் மாறுவதை அவரால் புரிந்து கொள்ள முடிந்தது. மற்ற சமயமாக இருந்தால் இது போன்ற நேரங்களில் அவனைத் தூக்கி, தோளில் முகத்தைசாய்த்துக் கொண்டு ‘வாணான்டா ராஜா’ என்று மட்டும்தான் சொல்ல முடியும். ஆனால் இன்று அதற்கேற்ற மனநிலை இல்லை.

பாஸ்கருக்கு ‘ப்ரைமரி காம்ப்ளெக்ஸ்’ இருப்பதாகச்சொன்ன டாக்டர், மாத்திரைகளையும், டானிக்கையும் எழுதிக்கொடுத்து விட்டு அதன்தொடர்பாக இன்னொன்றையும் சொன்னார்.

‘’வெளெயாடக் கூடாது. வேர்க்கக் கூடாது, மாத்திரை டானிக் மாதிரி இதுவும் ரொம்ப முக்கியம்’’ என்று அவர் கூறியதை பாஸ்கரிடம் எத்தனை முறை சொர்ணவேலு கூறி இருக்கிறார்.

அவன் கேட்க மறுத்துவிட்டானே.

‘’ஒரு பொடியன் நம்ம பேச்சே கேக்கமாட்டான்ட்டானே’’ என்ற நினைப்பு அவரை ஆத்திரப்படுத்தியது.

‘’ஒங்கசொல்லெயே மீறுறான்னா…’’ என்று அவர்மனைவி கூறியது அந்த நினைப்பிற்கு வெறி ஏற்றியது.

அவனை முன் நிறுத்தி முகம் சுளித்துப் பார்த்தார்.

ஊசி மாதிரி அவன் முகத்தில் இது இறங்கி அவனை இம்சிக்கும் என்பதை அவர் அறிவார்.

இந்த மௌனப் பார்வையே அவனுக்குப் போதும் என நினைத்துக் கொண்டு முகம் திருப்பிப் போன நேரங்கள் நிறைய உண்டு. ஆனால் இன்று அது போதாது.

‘’அம்மா சொல்றதுல்லாம் உண்மைதானா?’’

அவன் மறுக்கவில்லை. பதில் சொல்லவும் இல்லை. முகத்தை மட்டும் இரக்கத்தையும், அனுதாபத்தையும் தூண்டி விடுகிற விதத்தில் பரிதாபமாக வைத்துக் கொண்டு ஏறிட்டுப் பார்த்து விட்டு தலை குனிந்தான்.

‘’போ… வராண்டாவுக்கு போ… போயி நீல் டௌன் போடு.’’

இப்போது பாஸ்கர் பேசினான்.

‘’எக்ஸக்யூஸ்ப்பா…’’ குரல் தாழ்ந்து ஒடுங்கி ஒலித்தது.

‘’நோ எக்ஸ்க்யூஸ்… போ… போயி நீல் டௌன் போடு.’’

அவன் தயங்கி தயங்கித் வராந்தாவிற்குச் சென்றான். வராந்தாவை ஒட்டிய ஜன்னலைப் பார்த்துவிட்டு திரும்பவும் அறைக்குள் ஓடி வந்தான்.

‘’போடப் போறையா இல்லையா?’’ சொர்ணவேலு குரலை உயர்த்தினார்.

ஜன்னலைப் பார்த்தபடியே சிறுவன் சொன்னான்.

‘’எக்ஸ்க்யூஸ்ப்பா…’,

‘’நோ எக்ஸ்க்யூஸ்.’’

அவன் ஜன்னலை நோக்கினான். அங்கே என்ன விசேஷமிருக்கிறது என்பதை அறிய சொர்ணவேலுவும் அங்கே பார்த்தார்.

ஜன்னலுக்குப் பின் இரண்டு மூன்று குழந்தைகளின் முகங்கள் தெரிந்தன. அவற்றிற்கிடையில் ஒரு தாயின் முகமும் தெரிந்தது.

அவருடைய சொந்த வீட்டின் ஒரு போர்ஷனை வாடகைக்கு விட்டிருக்கிறார். அந்தப் போர்ஷனின் ஜன்னல் ஒன்று வராந்தாவை ஒட்டி இருக்கிறது. எப்போதும் அது மூடியே கிடக்கும். திறந்து கிடப்பது அபூர்வம். அந்த அபூர்வ நாட்களில் இதுவும் ஒன்றாக இருக்க வேண்டும்.

அவர்களைப் பார்த்ததும் சொர்ணவேலுவுக்கு உற்சாகம் பிறந்தது. அவமதிப்புகளும், தண்டனைகளும் பிறர் முன்னிலையில் தரப்படும்போதுதான் முழுப் பலன் கிடைக்கிறது என்று அவருக்குத் தோன்றியது.

‘’இப்பப் போடப் போறையா இல்லையா?’’

‘’நாளெக்குப்போட்றம்பா.’’

இன்னெய தப்புக்கு இன்னெக்குத்தான் தண்டனை.’’

அவன் நகரவில்லை.

சொர்ணவேலு அவன் கையைப் பிடித்து வராந்தாவிற்கு இழுத்தார். அவன்திமிறிக் கொண்டு அறைக்குள் ஓடி வந்தான்.

சொர்ணவேலுவின் கோபம் தீவிரப்பட்டது.

தலையில் குட்டுவதோ, காதைத் திருகுவதோ, தொடையைக் கிள்ளுவதோ, முதுகில் அறைவதோ அவர் பழக்கமில்லை. இப்படிப் பட்ட நேரங்களில் அவரது கடைசி ஆயுதம் ஒன்றே ஒன்றுதான். அதைப் பிரயோகிக்கும் நேரம் வந்துவிட்டதை அவர் உணர்ந்தார்.

‘’அப்படியா சங்கதி?… என்னோட இன்னமே நீ பேசக்கூடாது.ஒன்னோட நா டூக்கா.’’

பாஸ்கர் உதடு பிதுக்கி, முகம் கோணி, மௌனமாக விம்மி, பிறகு வாய்விட்டு அழுதான்.

‘’இந்த ரூம்லேயே நீ நிக்கக் கூடாது. போ…’’

அவன் அழுதபடி, அடுத்த அறைக்கு கால்களைத் தேய்த்தபடி நடந்தான்.

அடுத்த அறையில் அவனுடைய அம்மாச்சியின் செல்லத்தழுவலும், ஆறுதல் குழைவுகளும் அவனின் அழுகையை உக்கிரப்படுத்தின.

சட்டையையும், பாண்ட்டையும் கழற்றி சொர்ணவேலு கட்டிலின் மேல் எறிந்தார். ஒழுங்காக மடித்து, ஹங்கரில் மாட்டி, கப்போர்ட்டில் தொங்க விடுகிற பழக்கம் இன்று கை நழுவிப் போயிற்று.

கொல்லைப்புறம் சென்று, முகம் கழுவி விட்டு வந்தபோது தட்டில் சப்பாத்தி தயாராக இருந்தது வழக்கமாக நான்கு சப்பாத்திகள் சாப்பிடுபவர் இன்று இரண்டோடு நிறுத்திக்கொண்டார்.

யாருடனும் எதுவும் பேசாமல் மொட்டை மாடிக்கு சென்று, யாரோ பின்னிருந்து தள்ளுவதுபோன்று வேகநடை போட்டு நடந்தார். நிதானமாக, அளந்துஅளந்து போடும் நடை இன்று அவருக்கு அந்நியமாகிவிட்டது.

தன் வளர்ச்சி, தன் கௌரவம் இவற்றைச் சுற்றியே நினைவுகள் ஓடி வந்தன.

‘’ஆட்டெக் கடுச்சி, மாட்டெக் கடுச்சி, கடேகல நம்ம கிட்டயே வந்தாச்சா?….’’

நடையில் வேகம் கூடக் கூட அந்த நினைப்பு உதறப்பட்டது.

‘’அவனோட வயசென்ன? ஒன்னோட வயசென்ன?…’’ என்று அவர் தன் மனைவிக்குச் சொன்னதை தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டார்.

‘’அவனெ சமமா நெனச்சு. சரிக்கு சரின்னு நிக்கிறதா?… சே… என்ன பைத்தியக்காரத்தனம்…!’’

அவர் மாடியிலிருந்து இறங்கி வந்த போது ட்யூப்லைட்கள் அணைக்கப்பட்டிருந்தன. வெளிர் நீல ‘பெட்ரூம் லைட்’ ஆகாயத்து நிறத்தை அறைக்குள்  தேக்கி நின்றது.

அவர் கட்டிலில் படுத்தார். தூங்கிவிட்டதாக நினைத்த அவரின் மனைவி விழித்துக் கொண்டுதான் படுத்திருந்தாள்.

‘’பாவங்க… அவென் மூஞ்சி என்னமோ மாதிரி போயிருச்சுங்க.’’

அவளின் அனுதாபம் அவரை ஆத்திரப்படுத்தியது.

‘’நா சொன்னா அவன் சட்டெயே பண்ண மாட்டான். ஆனா நீங் ஏதாச்சும் சொன்னா தொவண்டு போயிர்ராங்க’’ என்று மேலும் சொன்ன போது அவரது கோபம் வெடிப்பு நிலை கண்டது.

இப்போது நடந்த எல்லாவற்றிற்கும் இவள்தானே சூத்ரதாரி?

இவனின் மன அவஸ்தைகளுக்கான பொறுப்பில் மூலப் பங்கு வகிக்க வேண்டியவள் இவள்தானே?

வாசலிலேயே புகார் அறிக்கை வாசித்ததுதானே இவ்வளவுக்கும் காரணம்?

‘’சரி, போதும். ரொம்பக் கரிசனம்தான்…’’

அவர் முகம் திருப்பிப் படுத்துக் கொண்டார். பாஸ்கரின் முகத்தைத் திரும்பத் திரும்ப நினைவிற்குக் கொண்டு வந்தார்.

வாடி வதங்கி கறுத்துப் போய் பரிதாபமாக இருந்த முகம் அவரை வதைத்தது. உள்ளே பிசைந்து பிசைந்தெடுத்தது நடந்தவற்றை ஆரம்பத்திலிருந்து ஒவ்வொன்றாக நினைத்துப் பார்த்தார்.

‘’என்னதான் இருக்கட்டுமே. சொல்லீட்டென்ல. ஏன் மறுக்கணும்? மறுக்கிறது என்னெ அவமானப்படுத்துறது இல்லையா?’’

கசப்புணர்ச்சி எதுவும் இல்லாமல் நிதானமாக நினைத்துப் பார்த்தார். அவர்விரும்பியதை அவன் மறுநாள் செய்வதாகக் கூறியது அவரது கவனத்தைத் தொட்டது.

‘’அதுக்கு என்ன அர்த்தம்?’’

நினைப்பு ஒரு புள்ளியில் நின்று அழுத்திய போது அகல் விளக்கு ஒன்று ஏற்றப்பட்டது மாதிரி இருந்தது.

ஜன்னல் வழியாகப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் முன்னிலையில் ‘நீல் டௌன்’ போடுவதை அவமானமாகக் கருதுகிறானோ? அதனால்தான் இந்த மறுதலிப்போ?

‘’சொன்ன நிமிஷத்திலேயே அவன் செஞ்சிருந்தா மான உணர்ச்சி அவன்ட்ட இல்லேன்னுதானே ஆகும். வெட்க உணர்ச்சியே அவன்ட்ட இருந்து கொன்றுவிட்றது மாதிரி ஒரு மடத்தனம் வேறு இருக்க முடியமா?’’

அப்பொழுதே எழுந்து போய் பாஸ்கரை சமாதானப்படுத்த வேண்டும்போல் இருந்தது. அவன் கையை எடுத்து தன் கன்னத்தில் தட்டிக் கொண்டு ‘எக்ஸ்க்யூஸ் மீடா ராஜா’ என்று கூற மனம் தவித்தது. ஆயினும் அதற்கான வேளை அது அல்ல என்பதை அவர் உணரவே செய்தார்.

விடிவை எதிர் நோக்கிக் காத்திருந்தார்.

இரவுப் பொழுது நீண்டு தெரிந்தது.

முழு விழிப்பும், அரை விழிப்பும், கால் விழிப்புமாக நேரம் கழிந்தது.

இரவு நேரத்து சிறுசிறு சப்தங்கள் காதருகில் பேரிரைச்சலாகக் கேட்டன.

கூர்க்காவின் கைத்தடிச் சத்தம் தலையில் பௌதீகமாய் வந்து தாக்கியது.

ஜன்னலுக்கு வெளியே வெளிச்சம் தெளியாமல் குழம்பித் தெரியும் போதே சொர்ணவேலு எழுந்து விட்டார்.

பாஸ்கர் இன்னும் தூங்கிக் கொண்டிருந்தான்.

காலை வேலைகளை வேக வேகமாக முடித்துக் கொண்டு தனது நாற்காலியில் வந்து அட்கார்ந்து மேஜை மேல் வைத்திருந்த புத்தகத்தை எடுத்தார். விட்ட இடத்திலிருந்து அதைப் படிக்க மூன்று முறை முயன்றும் அவரால் முடியவில்லை.

இப்போது அறையின் கதவருகே சிரித்துக்கொண்டு நின்றாள் அவரின் மனைவி. அவள் சேலையை இறுக்கமாகப் பற்றி அவளோடு ஒட்டி நின்றான் பாஸ்கர்.

‘’இங்கே யாரு வந்திருக்கிறதுன்னு பாருங்களேன்.’’

சொர்ணவேலு திரும்பிப் பார்த்தார்.

மனத் தவிப்பை மறைத்துக் கொண்டு ஜம்பமாக முகம் உயர்த்தினார்.

‘’அவனோட யாரு பேசுவா? நாந்தான் டூக்கா விட்டாச்சே.’’

உதடு பிதுக்கி, முகம் கோணி, கண்ணீர் மணிகள் சிதற நின்றான் பாஸ்கர்.

அவர் ‘படக்’கென எழுந்து அவனைத் தூக்கி கொண்டு ‘’வாணாம்… வாணாம்… ஒன்னோட டூக்கா இல்லே. சேத்தி’’ என்று குரல் தழுதழுக்கச்சொன்னபோது பாஸ்கர் முன்னிலும் அதிகமாக அழுதான்.

‘’அழக் கூடாது, ராஜா அழக்கூடாது’’ என்று சொன்ன அவருக்கு அழுகை வந்தது.

Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *