ஆட்சியின் முடிவே தமிழகத்தின் விடிவு

நல்லாட்சி என்பது பெருமளவிலான மக்கள் பங்கேற்பு, சட்டத்தின் ஆட்சி, வெளிப்படைத்தன்மை, விரைந்த செயல்பாடு (responsiveness), சமத்துவமாக அனைவரையும் ஒன்றிணைக்கும் பண்பு, தகுதி மற்றும் செயல்திறனுக்கு (effectiveness and efficiency) முக்கியத்துவம், பொறுப்பாண்மை (accountability) ஆகியவற்றைக் கொண்டிருக்க வேண்டும்.

சற்று விளக்கமாகச் சொல்வதென்றால் அந்த ஆட்சியானது கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட வாழ்வாதரத் தேவைகளை நிறைவேற்ற வேண்டும். உணவு, குடிநீர், சுற்றுச்சூழல் போன்ற வாழ்வாதர உரிமைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். குழந்தைகள், பெண்கள் நலன் காக்கும் அரசாக இருக்க வேண்டும். சமத்துவத்தையும் மனித மாண்பும் பேணுவதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். யோசித்துப் பாருங்கள் தமிழக அரசு எப்படி இருக்கிறது என்று…?

புதிதாக ஏதும் செய்ய வேண்டாம். பெருமளவிலான மக்கள் பங்கேற்புடன் கூடிய உள்ளாட்சி நிர்வாகத்தையாவது இயக்க வைத்திருக்க வேண்டுமல்லவா? ஆனால், அதை முடக்கும் நோக்கத்தில் இப்போது உள்ளாட்சித் தேர்தலைகூட தள்ளிப்போட்டுக்கொண்டே செல்கிறது. பஞ்சாயத்துராஜ் சட்டம் வந்தபிறகு உள்ளாட்சித் தேர்தலைத் தள்ளிப்போடும் முதல்மாநிலமாக தமிழகம் இருக்கிறது. இது தலைகுனிவு என்பதோடு, மக்கள் ஜனநாயகத்துக்கு வைக்கும் வேட்டு.

எந்தத் துறையிலும் வளர்ச்சியினைக் காணமுடியவில்லை. உலக முதலீட்டாளர் மாநாடு நடத்திட தமிழக அரசு தயாராகிறதாம். பொதுவாகவே தமிழகத் தொழில் வளர்ச்சியானது, வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும் வகையில் இல்லை. தொழில் ஊக்குவிப்பு என்ற பெயரில் வெளிப்படைத்தன்மை எதுவும் இல்லாத புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்படுகின்றன. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது நடந்த உலக முதலீட்டாளர் மாநாட்டில் இரண்டு லட்சத்து நாற்பத்தி இரண்டாயிரம் கோடி ரூபாய் அளவிற்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டதாக சொல்லப்பட்டது. 2016 ஆம் ஆண்டு தமிழ்நாடு பட்ஜெட் உரையில் இம் முதலீடுகள் மூலம் இரண்டு லட்சத்து எண்பதாயிரம் பணியிடங்கள் உருவாகும் என்று கூறப்பட்டது அப்படியானால் ஒரு கோடி ரூபாய் முதலீட்டிற்கு ஒரு பணியிடம் என்று அர்த்தம். சிறு குறு மூலதனங்கள் மூலமும் அரசு முதலீடுகள் மூலமும் வேலை வாய்ப்பை பெருக்கும் வகையிலான தொழில் கொள்கைகளை அரசு பின்பற்றவில்லை. தொழிலாளர் உரிமைகள் கண்டுகொள்ளப்படவில்லை என்பது தனிக்கதை.

மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட 2016-17 நிதியாண்டுக்கான ஆய்வறிக்கையில், தமிழ்நாடு பற்றிய தக்வல்கள், நாம் மகிழும் அளவில் இல்லை. உற்பத்தித் துறையில் வெறும் 1.64% வளர்ச்சியையே தமிழகம் கண்டுள்ளது. விவசாய உற்பத்தியில் எதிர்மறை வளர்ச்சியை (மைனஸ் 8%) கண்டுள்ள மாணிலம், தமிழகம் மட்டுமே.

மக்கள் பிரச்சனையானாலும் சரி.. உள்கட்சி விவகாரமானாலும் சரி கண்டுகொள்ளாத தலைமையைக் கொண்ட ஆட்சிதான் தமிழகத்தில் நீடிக்கிறது. அரசு இயங்குகிறது என்பதற்கான அடையாளங்கள் ஏதுமில்லை. யார் ஆட்சி செய்கிறார்கள் என்பதுகூட பலவேளைகளில் புரியவில்லை. குறிகேட்கச் சென்று திரும்புவதுபோல பரப்பன அக்ரஹாரம் சென்று வருகிறார்கள். அங்கிருப்பவர் உத்தரவிட்டார் அதனால் ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளரை ஆதரிக்கிறோம் என்கிறார்கள். ஆதரவு கேட்டவர்களும் அசிங்கப்படவேண்டிய ஒன்று இது. அ.தி.மு.க.வின் அணிகள் தமிழக மக்களை ஏமாற்றி வருகின்றன. தமிழகத்திற்கான விடிவு எப்போது? அது ஆட்சியின் முடிவிலிருந்துதான் தொடங்கவேண்டும் போலிருக்கிறது.

-சிறப்பாசிரியர்.

Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *